நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையில், கஜா புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என மாணவர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, மத்திய அரசுக்கு தமிழக அரசு இதுதொடர்பான கோரிக்கையை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மே 5-ஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க வரும் வெள்ளிக்கிழமை (நவ.30) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில், கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிய ஓரிரு நாள்களே உள்ள நிலையில் கஜா புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சுமார் 7 மாவட்டங்களில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமிழக மாணவர்களின் எதிர்காலம், நீட் தேர்வில் விண்ணப்பிக்கும் விவகாரத்திலும் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக புயல் பாதித்த பல பகுதிகளில் மின்சாரம் இல்லாததாலும், மாணவர்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருவதாலும், நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
புயல் பாதிப்பை காரணம் காட்டி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பிலும் கோரிக்கை மனு ஒன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நீட் தொடர்பான விவகாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என மாநில அரசு தரப்பில் அனுப்பப்பட்ட கோரிக்கை மனு பரிசீலனையில் இருந்து வருகிறது. மேலும், அது குறித்து தேசிய தேர்வு முகமையிடம் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அதுகுறித்த இறுதி முடிவு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment