போலியான வாகன பதிவெண் தட்டுகளை கட்டுப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருந்ததாவது:
வாகன உற்பத்தியாளர்கள் 2019 ஏப்ரல் 1 முதல், தங்களது வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் பொருத்தி டீலர்களுக்கு விநியோகிப்பது கட்டாயம் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்காக மத்திய மோட்டார் வாகன விதிகள்-1989, உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் மறு உத்தரவு-2001 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான முன்மொழிவு அறிவிக்கை வெளியிடப்பட்டு, அதன் மீதான ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன.
அந்த முன்மொழிவு தொடர்பாக ஆலோசிக்க, கடந்த ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள், வாகன சோதனை அமைப்பான இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம், சாலைப் போக்குவரத்துக்கான மத்திய நிறுவனம், மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சொஸைட்டி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது, அந்த முன்மொழிவுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகளானது, வாகனத்திலிருந்து அகற்ற முடியாத, மறுமுறை பயன்படுத்த இயலாத வகையில் வாகனத்துடனேயே பொருத்தப்பட்டு வரும்.
உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், மாநில அரசின் அங்கீகாரம் பெற்றிருக்கும் பட்சத்தில் பழைய வாகனங்களுக்கும் அவற்றை விநியோகிக்கலாம் என்று நிதின் கட்கரி அந்த பதிலில் கூறியிருந்தார்.
உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குரோமியம் அடிப்படையிலான ஒளிரும் பட்டைகள், வாகனத்தின் முன், பின் பதிவெண் தட்டுகளில் ஒட்டப்பட்டிருக்கும். அதில் நிரந்தர அடையாள எண்ணானது, லேசர் ஒளிக்கற்றை மூலமாக பொறிக்கப்பட்டிருக்கும். அது தவிர்த்து, வாகனத்தின் உள்பக்கமாகவும் ஒளிரும் பட்டைகள் மூலமாக பதிவு விவரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் என்றார்
No comments:
Post a Comment