கோபியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.
விழாவில் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு 723 மாணவ-மாணவிகளுக்கு ரூ.26¾ லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி பேசினார்.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பள்ளி கல்வி துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
மேலும் பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவும் அதன் மூலம் மாணவ-மாணவிகளின் எதிர்காலம் பிரகாசமாக அமையவும் இந்த அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும்போதே அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிகணினி மற்றும் சைக்கிள்கள் வழங்கப்படும். மத்திய அரசுடன் இணைந்து ஜனவரி மாத இறுதிக்குள் 671 பள்ளிகளில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
இந்த ஆண்டில் நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு தேர்வு மையங்கள் மண்டல வாரியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் ஒரு வார காலத்துக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்பட்டு உள்ளது. சிறப்பாசிரியர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
No comments:
Post a Comment