ராஜஸ்தானில் தமிழ் கற்கும் குழந்தைகள்: மகிழ்ச்சியில் பெற்றோர்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் குழந்தைகளுக்கு தமிழ் வழிக் கற்றல் பயிற்சியை இளைஞர் ஒருவர் அளித்துவருகிறார். இலவசப் பயிற்சி மூலம் தமிழ் கற்றுக் கொள்ளும் குழந்தைகளின் பேச்சாற்றலைப் பார்த்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உலக அளவில் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. உலகம் முழுவதும் போற்றப்படும் தமிழ் மொழியை ராஜஸ்தானில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கற்றுத் தருகிறார் முருகானந்தம். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று ஒரு திட்டம் தொடர்பாக ராஜஸ்தான் சென்றுள்ளார். தலைநகர் ஜெய்ப்பூரில் வசித்து வரும் முருகானந்தம், அங்குள்ள தமிழர்கள் குடும்பங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தமிழ் வகுப்பை நடத்தி வருகிறார்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்பது என்பது கடினமாக உள்ள சூழலில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் வளரும் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்சி அளிக்கிறார் முருகானந்தம்.திருக்குறள், ஆத்திச்சூடி, புறநானூறு மற்றும் பாரதியார் பாடல்களை கற்கும் குழந்தைகள் தமிழை சரளமாக பேசக் கற்றுக்கொண்டுள்ளதாக அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சிபொங்க தெரிவிக்கின்றனர்.மூத்த மொழியான தமிழை கற்பதில் பெருமைகொள்வதாக பயிற்சி பெற்று வரும் குழந்தைகளும் தெரிவிக்கின்றனர். இதேபோன்று உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதன் மூலம், தமிழின் பெருமை பரவிக்கிடக்கும் என்பதில் ஐயமில்லை
No comments:
Post a Comment