ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், வரும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் எத்தனை போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன என்பது குறித்த பட்டியலை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான (2019) உத்தேச தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் நலன் கருதி பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை தயார் செய்து கொள்ள வசதியாக இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதான தேர்வுகளாகக் கருதப்படும் குரூப்-1 தேர்வுக்கான அறிவிக்கை ஜனவரியிலும், குரூப்- 2 தேர்வுக்கான அறிவிக்கை மே மாதத்திலும், லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் குரூப்- 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பு ஜூனிலும் வெளியிடப்பட உள்ளன. குறைந்த அளவிலான தேர்வர்கள் பங்கேற்கக் கூடிய தேர்வுகளின் அறிவிக்கைகள் வெளியிடப்படக் கூடிய மாதங்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கான அட்டவணைப் பட்டியலை தேர்வாணைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 2016-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 17 அறிவிக்கைகள் மூலம், அனைத்து 17 தேர்வுகளும் நடத்தப்பட்டு 6 ஆயிரத்து 383 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 2017-ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 8 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 22 அறிவிக்கைகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. 2018-ஆம் ஆண்டில் 23 பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிட உத்தேசிக்கப்பட்டு அதில் 15 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.
அத்துடன் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்படாத 16 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மொத்தம் 15 பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், 16 பதவிகளுக்கான தேர்வுகள் வரும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படவுள்ளன. இவற்றின் மூலம் 4,365 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
Supper
ReplyDelete