தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று (ஜன.,2) துவங்குகிறது. லோக்சபா தேர்தல் வர உள்ளதால், கவர்னர் உரையில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பரில் நடக்கவில்லை. ஆனால், டிச., 6ல், சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடந்தது. இதில், கர்நாடக மாநிலம், மேகதாதுவில், அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை, அம்மாநில அரசு மேற்கொள்வதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்ததற்கும், கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், சட்டசபை கூட்டத் தொடர், முடித்து வைக்கப்பட்டது.
புத்தாண்டில், சட்டசபை கூட்டத் தொடர், இன்று துவங்குகிறது. இன்று காலை, 10:00 மணிக்கு, சட்டசபையில், கவர்னர், பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். கவர்னர் உரையுடன், இன்றைய கூட்டம் நிறைவு பெறும். பின், சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அதில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, எத்தனை நாட்கள் விவாதம் நடத்தலாம் என, முடிவு செய்யப்படும்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், கவர்னர் உரையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா... என்ற, எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. கர்ப்பிணி பெண்ணுக்கு, 'எய்ட்ஸ்' நோயாளி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்; 'கஜா' புயல் பாதிப்பு, விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் பணி உட்பட, பல்வேறு பிரச்னைகளை, சட்டசபை கூட்டத்தொடரில் எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே, சட்டசபையில், அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment