ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 97 சதவீத ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பணியில் சேர்ந்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கூறியிருந்தார். இந்த அவகாசம் இரவு 7 மணிவரைநீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அதிகளவிலான ஆசிரியர்கள் படிப்படியாகப் பணிக்குத் திரும்பினர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 30 அரசுப் பள்ளிகளில் 4 பேர்மட்டுமே பணியில் சேரவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்த ஆசிரியர்களில் மொத்தம் 1,257 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
ஒழுங்கு நடவடிக்கை உறுதி: அவர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், செவ்வாய்க்கிழமை இரவு வரை பணியில் சேராத ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதிகள் விதி 17பி-இன் கீழ் குற்றக் குறிப்பாணை வழங்கப்பட வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நியமன அலுவலர் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தெரிவிக்க வேண்டும். பணியில் சேராத பணியிடங்கள் தொடர்பாக இயக்குநருக்குப் பட்டியல் அனுப்ப வேண்டும். தொடக்கப் பள்ளிகளைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை இரவு 82 சதவீத ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்.
மிகைப்படுத்தப்பட்ட தகவல்:
97 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதாக அரசுத் தரப்பில் கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.
இன்று பணிக்கு திரும்பினால்...
பள்ளிகளுக்கு புதன்கிழமை பணியில் சேரும் ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களின் முன் அனுமதி பெற்றே பணியில் சேர வேண்டும். அவர்கள் ஏற்கெனவே பணிபுரிந்த பள்ளிகளில் சேர அனுமதி கோரினால் பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தவிர்க்கும் பொருட்டும், ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதியும் முதன்மைக்கல்வி அலுவலரால் வழங்கப்படும் பணியாணை வழங்கப்படும் இடத்தில் பணியில் சேர அறிவுறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment