பொறியியல் (பி.இ.) பட்டதாரிகளுக்கான பி.எட்., (கல்வியியல் கல்வி) படிப்பு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொறியியல் மாணவர்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் பி.எட்., படிப்புகளில் கடந்த 2015-16 கல்வியாண்டு முதல் பி.இ. பட்டதாரிகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். பி.எட். படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய நான்கு பிரிவுகளில் மட்டும் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில் 20 சதவீத இடங்கள், அதாவது 220 முதல் 240 வரையிலான இடங்கள் இவர்களுக்கு ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டது. ஆனால், பொறியியல் மாணவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத காரணத்தால், இந்த இடஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, கடந்த 2018-19 கல்வியாண்டில் மொத்த பி.எட்., இடங்களில் வெறும் 5 சதவீதம் மட்டுமே பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இது மேலும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏ.ஐ.சி.டி.இ., புதிய நடைமுறை: இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்தது, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால், இதுகுறித்து ஆய்வு செய்து உரிய தீர்வு காண்பதற்காக நிபுணர் குழு ஒன்றை ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம்) அண்மையில் அமைத்தது. இந்த நிபுணர் குழு தீவிர ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு பரிந்துரைகளை ஏஐசிடிஇ-யிடம் சமர்ப்பித்தது.
இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ள ஏஐசிடிஇ, 2019-20 கல்வியாண்டு பொறியியல் கல்லூரிகள் அனுமதி புதுப்பிப்பு மற்றும் புதிய பொறியியல் கல்லூரிகள் அனுமதி நடைமுறைகளில், இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. இந்தப் பரிந்துரைகளில், பொறியியல் கல்லூரிகளில் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பி.எட்., முடிப்பதை கட்டாயமாக்கலாம் என்ற பரிந்துரையும் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக பி.எட். படிப்பின் மீதான ஆர்வம் பொறியியல் மாணவர்களிடையே மீண்டும் எழுந்துள்ளது. தங்களுக்கான பி.எட்., படிப்பு இடங்கள் மீண்டும் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடைய எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தங்கசாமி கூறியது:
பி.எட். படிப்பில் சேரும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்த காரணத்தினாலேயே, கடந்த ஆண்டு அவர்களுக்கான பி.எட். இடஒதுக்கீடு 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இப்போது, ஏஐசிடிஇ அமைத்த நிபுணர் குழு பரிந்துரை, நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டால் பொறியியல் மாணவர்களிடையே பி.எட். படிப்பின் மீது மீண்டும் ஆர்வம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது, தேவையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பி.எட். இட ஒதுக்கீடும் அதிகரிக்கச் செய்ய வாய்ப்புள்ளது என்றார்.
No comments:
Post a Comment