பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலக ஊழியர்கள் புதன்கிழமை (ஜன. 30) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக் குழுவின் நிலுவைத் தொகை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தலைமைச் செயலக ஊழியர்களும் ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காலையில் திரண்ட ஊழியர்கள்: ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் அறிய, தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் திங்கள்கிழமை காலை திரண்டனர். சங்க அலுவலக வாயிலில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊழியர்களிடையே பேசிய சங்க நிர்வாகிகள், திங்கள்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என்று அறிவித்தனர்.
அதன்படி, மாலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜனவரி 30-ஆம் தேதியன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்: தலைமைச் செயலகச் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படைப் பணியாளர் மாநில மையச் சங்கம் ஆகிய அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பல்வேறு காலகட்டங்களில் எங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரிடம் மனுக்களை அளித்தோம். இதுவரை அவற்றுக்கு அரசு செவிசாய்க்கவில்லை.
1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத்தைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை அளிக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி புதன்கிழமை தலைமைச் செயலக ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். அதிலும், எங்களது கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை என்றால், வரும் வியாழக்கிழமையன்று அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் ஒன்றுகூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்போம்.
எனவே, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் தள்ளிவிடக் கூடாது. ஜாக்டோ-ஜியோவுடன் இணைந்த போராட்டம் அல்ல, எங்களது போராட்டம். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் போராட்டம். இதனை அரசு உணர வேண்டும் என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment