எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஜாக்டோ - ஜியோ இன்று போராட்டம் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் பள்ளி சாவியை ஒப்படைத்த ஆசிரியர்கள்

Tuesday, January 22, 2019




ஜாக்டோ - ஜியோ சார்பில் இன்று நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளை பூட்டி சாவிகளை சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அதிகாரிகளிடம்  தலைமை ஆசிரியர்கள் ஒப்படைத்தனர்.

அதே நேரம் பள்ளிகளை பூட்டும் திட்டத்தை முறியடிக்க கல்வி அதிகாரிகளும் களத்தில் இறங்கி உள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும், அது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து ஜாக்டோ - ஜியோ சார்பில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘போராட்டத்தில் பங்கேற்றால் சம்பளப் பிடித்தம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அரசு எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, ‘அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்’’ என எப்போதும் இல்லாத வகையில், ஒன்றிய மற்றும் வட்ட அளவில் ஆசிரியர் சங்கங்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் சாவி, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பில் உள்ளது.
பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இன்று நடக்கும் ஸ்டிரைக்கில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால், பள்ளி சாவியை அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நேற்று மாலை ஒப்படைத்து சென்றனர்.

ஜாக்டோ-ஜியோ  போராட்டத்தில் வருவாய்த் துறையில் உதவியாளர் முதல் அலுவலர்கள் வரை  அனைவரும் பங்கேற்பதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்து உள்ளது.  இதனால், திருவள்ளூர் உட்பட அனைத்து தாலுகா அலுவலகங்கள், வருவாய்  கோட்டாட்சியர் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

மேலும்,  அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்களும் பங்கேற்பதால், பள்ளிகளுக்கு  வரும் மாணவர்களுக்கு மத்திய உணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்படும் நிலை  உள்ளது.

பள்ளிகள் இயங்க மாற்று நடவடிக்கை
கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இன்று பள்ளிகள் கண்டிப்பாக செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

 எனவே, ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டாலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஊழியர்களை வைத்து பள்ளியை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியலை கேட்டுள்ளோம்.

போராட்டத்தால் ஒரு பள்ளி கூடங்கள் மூடப்படும் சூழ்நிலை ஏற்படாது. மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படி பள்ளிகள் இயங்க உரிய மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One