ஜாக்டோ-ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜன.22) ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர் கோகுல் தாக்கல் செய்த மனுவில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் 6-ஆம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும், மார்ச் 14-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்க உள்ளது.
இந்த பொதுத் தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். இந்த நிலையில் ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, அவர்களால் பொதுத் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியாத நிலை ஏற்படும்.
எனவே இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 19-ஆம் தேதி கொடுத்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்குரைஞர் நவீன் நீதிபதியிடம் முறையிட்டார். இதனையடுத்து வழக்கை செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி நீதிபதி உத்தரவிட்டார்
No comments:
Post a Comment