எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழக தலைமைச் செயலர் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி மனு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

Thursday, January 31, 2019




குட்கா முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்ததாக, தமிழக தலைமைச்  செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கதிரேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
குட்கா முறைகேடு தொடர்பாக கடந்த 2016-இல் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காவல்துறையினர், உயர் அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு லஞ்சமாக பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. குட்கா முறைகேட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வருமானவரித் துறை கடிதம் அனுப்பியது. அப்போதைய டிஜிபி அசோக்குமார், இந்த கடிதத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இந்நிலையில், குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன். அந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தரப்பில், குட்கா முறைகேட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்த ஆவணமும் அரசு அலுவலகங்களில் இல்லை  என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் கடந்த 2017-இல் வருமானவரித் துறை சோதனையின் போது, குட்கா முறைகேட்டில் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வருமானவரித் துறை அளித்த கடிதம் உள்ளிட்ட சில ஆவணங்கள் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் வருமானவரித் துறையினர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தவறான தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, குட்கா விவகாரம் தொடர்பாக வருமானவரித் துறையினர், டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது மற்றும் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு  நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குட்கா முறைகேடு தொடர்பாக நடவடிக்கை கோரி வருமானவரித்துறை  அனுப்பிய கடிதம் தலைமை செயலர் அலுவலகத்துக்கு சென்றடைந்துள்ளது என்று வருமானவரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர், வருமானவரித் துறையினர் அனுப்பிய கடிதம் அரசுக்கு சென்றடைந்தபோது, தற்போதைய தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பில் இல்லை. மேலும், அவர் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தபோது, குட்கா புகார் தொடர்பான ஆவணங்கள் ஏதும் அரசிடம் இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று வாதிட்டார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One