ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 5வது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த 4 நாட்களாக பல்வேறு இடங்களில் பள்ளிகள் செயல்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
5வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள சிரமத்தை அரசு கூறும்போது ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறியுள்ளார். ஓய்வூதிய சுமை அதிகரித்துள்ளதால்தான் புதிய ஓய்வூதிய திட்டம் பங்களிப்பு முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் 174 நாடுகளில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வுதிய திட்டம் அமலில் இருந்தால் அரசு திவாலாகும் நிலை ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். மேலும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சம்பளம் வழங்க மட்டுமே தமிழக அரசால் செயல்பட முடியாது என அவர் கூறியுள்ளார். தமிழக அரசு ஏற்கனவே 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்றும், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனில் கடன் வாங்கிதான் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடன் பெற்றால் மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை திணிப்பது ஒன்றே வழியாகும், மக்கள் மீது கூடுதல் வரிச்சுமை சுமத்துவதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது என அவர் தெரிவித்தார். மேலும் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று தமிழகத்தில் ஊதிய உயர்வு வழங்கியுள்ளதாகவும், நிதி நிலையை உணர்ந்து, மாணவர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் பணிக்கு திரும்பாவிட்டால் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகும் என அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment