பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது, அது அரசின் பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு அனுமதி கோரிய மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்.
ஆசிரியர்கள் 4வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பணிக்கு வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று அரசு தெரிவித்தது. இருப்பினும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்வதால், உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.
நீதிமன்றம் உத்தரவையும் மீறி ஆசிரியர்கள் போராட்டம்
இதனிடையே ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடை கோரி கோகுல் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மாணவர் கோகுல் செய்த மனுவை 2 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அப்போது, ஜனவரி 25-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும் ஆசிரியர்கள் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், போராட்டம் நீடிக்கும் என்று அறிவித்தனர்.
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது : நீதிமன்றம்
இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு அனுமதி வேண்டி மனுதாரர் கோரிக்கை விடுத்தார். அப்போது பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பணிக்கு திரும்ப வேண்டும் என்கிற உத்தரவை மீறிய ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் வேலை என்று தெரிவித்த நீதிபதி, பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்த நோட்டீசிற்கு தடைவிதிக்கப்படவில்லை எனறும் தெரிவித்தார்
No comments:
Post a Comment