ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாவது நாளான புதன்கிழமை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் இரண்டாவது நாளான புதன்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை பெருநகர மாநகராட்சி முன்பு புதன்கிழமை காலை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி பின்பகுதி வழியாக ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முடிவுக்கு வருமா போராட்டம்?: அப்போது ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது அரசு ஊழியர்கள் கையில் இல்லை. முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் கைகளில்தான் உள்ளது. குடியரசு தினத்தன்று மீண்டும் கூடி அடுத்தகட்ட போராட்டத்தை வலுப்படுத்த முடிவு செய்வோம். அதற்குள்ளாக ஒருங்கிணைப்பாளர்களை அரசு அழைத்து பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள் விளையாட்டரங்குக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அனைத்து மாவட்டங்களிலும்: சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம் சானடோரியம், மாதவரம் மாநகராட்சி மண்டல அலுவலகம் பகுதிகளில் நடைபெற்ற மறியலில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.
இதேபோன்று திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு என அனைத்து மாவட்டங்களிலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர். திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்பட சில மாவட்டங்களில் அரசு ஊழியர்கள்- போலீஸார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அரசுப் பணிகள்- கற்பித்தலில் பெரும் தொய்வு: போராட்டம் காரணமாக வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்பட அனைத்து துறை சார்ந்த அலுவலகங்களில் சான்றிதழ் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் கற்றல்-கற்பித்தலில் பெரும் தொய்வு ஏற்பட்டது. பள்ளிகளை நடத்துவதற்கு தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், பயிற்சி ஆசிரியர்கள், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர் அழைக்கப்பட்டிருந்தனர்
No comments:
Post a Comment