கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சாந்தி தாக்கல் செய்த மனுவில், நான் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் கடந்த 1973-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றிய பின் கடந்த 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றேன். இதனையடுத்து 2005-2006 கல்வி ஆண்டு முழுவதும் அதாவது 2006-ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை பணிநீட்டிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். ஆனால் எனது பணி திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, எனது கோரிக்கையை பள்ளியின் தாளாளர் நிராகரித்து விட்டார். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.வி.
முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கடந்த 32 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.அவர் மீது பணி தொடர்பாக ஒரு குற்றச்சாட்டுக்கூட இல்லை. ஆனாலும், பணி திருப்திகரமாக இல்லை எனக்கூறி பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டின் நடுவில் ஓர் ஆசிரியர் பணி ஓய்வு பெற்றால் அந்தப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவேதான் அந்த ஆசிரியர் விரும்பும்பட்சத்தில் கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற பொதுவான நடைமுறை உள்ளது.
இந்த நடைமுறை மனுதாரர் விவகாரத்தில் மறுக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுத்து பள்ளியின் தாளாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.
மேலும், கல்வியாண்டின் நடுவில் ஒய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலன்கருதி அந்த கல்வியாண்டு முடியும் வரை பணியாற்ற பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment