இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசி நாளாகும்.
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எஃப்.டி. மற்றும் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பி.டெக்., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வு, அதனைத் தொடர்ந்து ஜே.இ.இ. பிரதானத் தேர்வு (அட்வான்ஸ்டு) ஆகியவை நடத்தப்படுகின்றன.
முதல் நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி.. சி.எஃப்.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர முடியும். அதேசமயம், முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்று, பிரதானத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.
இதில் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சி.பி.எஸ்.இ.) , பிரதானத் தேர்வை ஏதாவது ஒரு ஐஐடி-யும் இதுநரை நடத்தி வந்தன. இந்த நிலையில், 2019 ஆம் கல்வியாண்டுக்கான முதல்நிலைத் தேர்வை நடத்தும் பொறுப்பை மத்திய அரசு என்.டி.ஏ. விடம் ஒப்படைத்தது.புதிய நடைமுறை: அதனைத் தொடர்ந்து ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் புதிய நடைமுறையை என்.டி.ஏ. அறிமுகம் செய்தது. அதாவது தொடர்ச்சியாக இரண்டு முறை முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.
அதாவது, ஜனவரி மாத முதல்நிலைத் தேர்வில் திருப்திகரமான மதிப்பெண் பெறாத மாணவர்கள், உடனடியாக ஏப்ரலில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்கலாம். இந்த இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எதுவோ அதை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த இரண்டு தேர்வுகளுக்குப் பிறகே ஜே.இ.இ. பிரதானத் தேர்வு நடத்தப்படும்.
அதனடிப்படையில், முதல் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு ஜனவரி 8 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் தாள்-1 ஜனவரி 19 ஆம் தேதியும், தாள் இரண்டு ஜனவரி 31 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது. இப்போது, இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எப்போது? இந்த தேர்வானது ஏப்ரல் 7 முதல் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசியாகும்.
மேலும் விவரங்களுக்கு www.nta.ac.in, www.jeemain.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment