மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்பட உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் கேள்வித்தாள் வெளியாகாமல் இருக்க தற்போது மூன்று அடுக்கு பாதுகாப்பு முறைகள் அமல்படுத்த உள்ளது. மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் கண்டிப்பாக சீருடையில்தான் தேர்வு எழுத வர வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த இரண்டு வகுப்புகளிலும் நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் தேர்வுக்கு முன்னதாகவும், தேர்வு நடக்கும் போதும் கேள்வித்தாள் வெளியில் கசிந்த விவகாரம் பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது. அதேபோல, விடைத்தாள் திருத்துவதிலும் பிரச்னை எழுந்தது. இந்த சம்பவங்கள் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது போன்ற பிரச்னைகள் இல்லாமல் இந்த ஆண்டுக்கான தேர்வுகளை நடத்த கடுமையான விதிகளை கொண்டுவர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
லீக் அவுட்டை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு:
இந்த ஆண்டு முதல் தேர்வில் கேள்வித்தாள் வெளியாகாமல் இருப்பதற்காக 3 அடுக்கு பாதுகாப்பு முறைகளை தேர்வில் புகுத்த உள்ளனர். இதன்படி, தேர்வு எழுத வரும் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து வர வேண்டும். சீருடை அணியாதவர்கள் தேர்வு அறைக்குள் நுழைய முடியாது.ஹால்டிக்கெட்டில் மாணவர்கள் கையொப்பம், பள்ளி முதல்வர்கள் கையெழுத்து கட்டாயம் இருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு வரை விதி இருந்தது. ஆனால், பெற்றோர் கையெழுத்தும் இந்த ஆண்டு முதல் ஹால்டிக்கெட்டில் இடம் பெற வேண்டும். காலையில் 10 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் தவறாமல் வந்துவிட வேண்டும்.
அதற்கு பிறகு வரும் நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மொபைல் போன், மணி பர்ஸ் போன்றவை, எழுதப்பட்ட தாள்கள், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை தேர்வு மையத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. ஆனால், சர்க்கரை நோய் பாதிப்புள்ள மாணவர்கள் அவர்களுக்கான தின்பண்டங்களை(வெளியில் தெரியும்படி) எடுத்து செல்லலாம்
No comments:
Post a Comment