தமிழகத்தில் சமீபத்தில் வீசிய கஜாப் புயலின் கோரத்தாண்டவத்தில் உருக்குலைந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க,
அமெரிக்காவில் உள்ள தாலஸ் நகர தமிழ் மக்கள், வட கரோலினா வாகை குழு ஆகியோர் மொய்விருந்து நடத்தி, அதன் மூலம் கிடைத்த நிதியில் இருந்து ரூ 17 லட்ச ரூபாயை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எல்.என்.புரம் ஊராட்சியின் சோலார் விளக்குகள் அமைக்கவும், மரக்கன்றுகள் வழங்கவும், விவசாய நிலங்களில் வீழ்ந்துகிடந்த மரங்களை அப்புறப்படுத்தவும் அனுப்பி அதன் பணிகள் நடந்துவரும் சூழலில் மீண்டும் அமெரிக்காவில் உள்ள தாலஸ் நகர தமிழ்மக்கள் உதவியோடு *தமிழ்நாடு பவுண்டேசன் தாலஸ்* தமிழகத்தில் உள்ள அன்பாலயம் என்கிற மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்திற்கு உதவுவதற்காக *கொஞ்சும் சலங்கை* என்னும் நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நன்கொடை நிதியாக திரட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் 63 மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் தமிழ்நாடு பவுண்டேசன் அமைப்பின் ஆதரவில் இயங்கிவரும் அன்பாலயம் என்னும் காப்பகத்தில் இருக்கும் பல்வகை மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கான வசதிகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யப்போகிறது இந்நிதி என்பது உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி குறித்து, தமிழ்நாடு பவுண்டேசன் தாலஸ் அமைப்பின் தன்னார்வலரும், பொறியாளருமான பிரவீணா வரதராஜன் கூறுகையில், முதலில் கொஞ்சும் சலங்கை என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய தாலஸ் நகர தமிழ்மக்கள் அனைவருக்கும் நன்றி எனச் சொல்லி பேச்சைத் தொடங்கிய அவர், மனிதர்கள் எல்லோருக்குமே பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்னும் எண்ணமிருக்கிறது. ஆனால் அதனைச் செய்வதற்கான வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. அப்படியொரு சேவை செய்வதற்கான வாய்ப்பை இங்குள்ள தமிழ்மக்களுக்கு இறைவன் கொடுத்திருக்கிறான் என்னும் திருப்தியோடு கொஞ்சும் சலங்கை நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்டுள்ள நிதியான சுமார் 41 லட்சத்தில் 5 சதவீத நிதியை இயற்கைப் பேரிடர் நிதியாக தமிழ்நாடு பவுண்டேசன் அமைப்பின் விதிமுறைகளின்படி வழங்கிவிட்டு, மீதியுள்ள நிதியில் அன்பாலயத்தில் உள்ள குழந்தைகளின் ஆடைகளை சுத்தம் செய்ய துணி துவைக்கும் எந்திரம், அவர்களுக்கு தேவையான நாற்காலிகள், சமையலறையின் கட்டமைப்பு ஆகியவற்றை சரிசெய்யவும் பயன்படுத்திவிட்டு, மீதியுள்ள தொகை முழுவதையும், அன்பாலயத்தின் ஆயுட்காலப் பராமரிப்பிற்காக நிரந்தரவைப்பு நிதியாக வைத்து அதில் வரும்
வட்டித்தொகையிலிருந்து அன்பாலயத்தின் சிறப்பு ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் ஊதியம் வழங்கிடவும், அன்பாலயப் பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்..
கொடுப்பதற்கு பணம் தேவையில்லை.
மனமே தேவை.
அக்கரைச் சீமையிலிருக்கும் தாலஸ் தமிழர்களிடம் பணமும் இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்னும் நல்ல மனமும் இருக்கிறது.
அறம் செய விரும்பு என்னும் ஔவையின் வாக்கின்படி மனிதநேயத்தால் மிளிரும் தாலஸ் நகரத் தமிழ் மக்களுக்கும், தமிழ்நாடு பவுண்டேசன் அமைப்பிற்கும் நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் தகும்.
No comments:
Post a Comment