திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில், காலி வாட்டர் பாட்டில் போட்டால், ஒரு டம்ளர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழக்கும் இயந்திரம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 1ம் தேதி முதல், மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், துாய்மை நகரங்கள் பட்டியலில் உள்ள, திருச்சி மாநகராட்சி நிர்வாகம், பல ஆண்டுகளாக பொதுமக்களிடம் இருந்து குப்பையை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து வாங்கி உரம் தயாரிப்பதற்காக, நுண் உரம் செயலாக்க மையங்களையும் நிறுவி உள்ளது.அதனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பிளாஸ்டிக் பாட்டில் கிரஷர் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
இதை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்த, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறியதாவது:மக்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களை கண்ட இடங்களில் வீசுவதை தவிர்க்கும் வகையில், மத்திய பஸ் ஸ்டாண்டில், கோவை, சேலம் செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில், கிரஷர் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.இதில், பயன்படுத்திய குடிநீர் பாட்டிலை போட்டால், சுத்திகரிக்கப்பட்ட ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்கும். இந்த இயந்திரத்தில், மொபைல்களுக்கு சார்ஜ் போடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், ஸ்ரீரங்கம் கோவில் போன்ற இடங்களில், இந்த இயந்திரங்களை வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment