பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 500 ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த ஆண்டு 72 மையங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணிகளில் சுமார் 25 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் மதிப்பெண்களை கூட்டும் போது, பிழை செய்திருப்பதை தேர்வுகள் இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.
100-க்கு 72 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு 27 மதிப்பெண் பெற்றதாக கூட்டலில் தவறு இழைத்து தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஒரு பாடத்தில் 81 மார்க் எடுத்த மாணவனுக்கு 57 பெற்றதாக கொடுத்துள்ளனர்.
இந்த தவறுகள் எல்லாம் மதிப்பெண்களை கூட்டும்போது ஏற்பட்ட பிழையாகும். இதுபோல பல மாணவர்களுக்கு கூட்டல் பிழையுடன் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது.
பொதுத்தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் நகல் கேட்டு 50 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும், அதில், மறுகூட்டலுக்கு 4 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்ததாகவும் தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதில், 30 சதவிகித விடைத்தாள்களில் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பெண்களை கூட்டும் போது, 10 மதிப்பெண்கள் அளவிற்கு பிழை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறுகையில், மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யும்போது ஆசிரியர்களின் தவறு தெரிய வந்துள்ளது. கடந்த காலங்களை விட படிப்படியாக தவறுகள் குறைந்துள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை இயக்குனர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment