தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளுக்கான இறுதி தேர்வுபட்டியல் தயாரிக்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இறுதி தேர்வுபட்டியல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளில் 1,325 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித் தேர்வை நடத்தியது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வுக்கான கீ ஆன்சர் (உத்தேச விடைகள்) அக்டோபரில் வெளியானாலும் தேர்வு முடிவுகள் 2018-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி வெளியிடப்பட்டன.
மொத்தம் 95 மதிப்பெண்ணுக்கு நடைபெற்ற எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, எழுத்துத்தேர்வு மதிப்பெண், பதிவுமூப்பு மதிப்பெண் இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தற்காலிக தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 2018-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி வெளியிட்டது. அதில், ஓவியம், தையல் பாடப்பிரிவுகளில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த பலரின் பெயர் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் அவர்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்றோரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகி விளக்கம் கேட்டபோது, அவர்கள் தையல் மற்றும் ஓவியத்தில் ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஹையர் கிரேடு தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்க இயலாது என்று எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கத்தை தேர்வர்கள் காண்பித்தும் அவ்விளக்கத்தை ஏற்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தேர்வர்கள் (ஓவியம், தையல்) 30 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்க முடியாது என்று அத்தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, அதுதொடர்பான சான்றிதழைக் கேட்காமல், தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு மற்றும் தொழிலாசிரியர் சான்றிதழ் (டிடிசி) பயிற்சி ஆகியவற்றை தமிழ்வழியில் படித்திருந்ததைக் குறிப்பிடலாம். சான்றிதழ் சரிபார்ப்பு படிவத்திலும் அந்த விவரங்களைக் குறிப்பிட்டு உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தால் அத்தகைய விண்ணப்பதாரர்களின் பெயர்களை தேர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உத்தரவு பிறப்பித்தது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, தையல் மற்றும் ஓவிய பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீடு தற்காலிக தேர்வுபட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் விவகாரத்தால் நிராகரிக்கப்பட்ட தேர்வர்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்தது. சிறப்பாசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை தமிழ்வழியில் படித்திருப்பதை ஆன்லைனிலும் சான்றிதழ் சரிபார்ப்பு படிவத்திலும் எத்தனை பேர் குறிப்பிட்டுள்ளனர் என்பதையும் சரிபார்த்தது. ஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி 3 மாதங்கள் ஆகியும் இன்னும் இறுதி தேர்வுபட்டியல் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "தமிழ்வழி சான்றிதழ் பிரச்சினையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இறுதி தேர்வுபட்டியல் தயாரிக்கப்பட்டு அப்பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில், இறுதி தேர்வுபட்டியல் விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment