எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நீட் தேர்வை ரத்து செய்ய தமிழகத்தின் புதிய எம்.பிகள் என்ன செய்யலாம்?" கல்வியாளர் ஆலோசனை

Tuesday, May 28, 2019


சரியான நடவடிக்கைகள் இருந்தால் அடுத்த ஆண்டாவது நீட் தேர்வு நடக்காமல் செய்ய முடியும்" என்று நம்பிக்கை வார்த்தைகளுடன் பேசத் தொடங்கினார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல் தமிழக மாணவர்களும் நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டு விட்டது. சென்ற ஆண்டு தேர்வு எழுதச் சென்ற மாணவர்களை சோதனை எனும் பெயரில் அலைக்கழிக்கப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. அத்துடன் நீட் தேர்வு கிராமப்புற, அரசுப் பள்ளி, முதல் தலைமுறை மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்குகிறது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு, அதை மறுத்து கருத்துகளும் விவாதத்துக்குள்ளாகின.

தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரசாரம் சூடு பறந்தது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற அம்சமும் இருந்தது. பா.ஜ.க தரப்பில் அவ்விதமான உறுதிமொழியும் அளிக்கப்பட வில்லை. ஆனால், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவிருக்கிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிந்திருக்கும் நிலையில் அடுத்த ஆண்டும் தொடருமா... தொடராதிருக்க வாய்ப்பிருக்கிறதா... உள்ளிட்ட கேள்விகள் தொடர்பாகக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களிடம் கேட்டோம்.

 ``பா.ஜ.க அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வு குறித்து என்ன முடிவு எடுக்கும்?"

``நீட் தேர்வு கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு எவ்வளவு இடையூறு என்பதை விரிவாக தமிழகத்தில் விவாதிக்கப்பட்டுவிட்டது. அதனால், தற்போதைய நிலை பற்றிப் பேசலாம். பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களோடு ஆட்சி அமைக்கப்போகிறது. பா.ஜ.க எம்.பிகள் மோடியை மீண்டும் பிரதமராக்குகையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லித்தான் பதவி ஏற்பார். நாமும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட மாநிலத்தின் உரிமையைத்தான் நாம் கேட்கிறோம். நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்ற மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வாங்கித் தாருங்கள் என்றுதான் மத்திய அரசிடம் கேட்கிறோம்.

பா.ஜ.க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிரசாரத்தில், நீட் பற்றிப் பேசுகையில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்கிறார். தமிழ்நாட்டில் மட்டும் பி.ஜே.பி ஒரு தொகுதிகூட வெல்ல முடியாததற்கு இதுவும் முக்கியமான காரணம். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, `நான் மீண்டும் முதல்வரானால், மருத்துவத்திற்கு நுழைவுத் தேர்வு இல்லாமல் படிப்பதற்கு, வலுவான சட்டத்தை இயற்றுவேன்' என்று உறுதியாகக் கூறினார். அந்த வாக்குறுதிக்குத்தான் வெற்றியை அள்ளித் தந்தார்கள் தமிழக மக்கள். அந்த வாக்குறுதியை அடுத்து வந்த அ.தி.மு.கவினர் மதிக்கவில்லை. அதனால்தான் இப்போது பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.

பாரத பிரதமர் தமிழக மக்களின் வாக்குகளை மதிக்கிறார் உணர்வுகளை மதிக்கிறார் என்றால், தமிழக மக்களின் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்."

``தமிழகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம்.பிகள் இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்?"

``தமிழகத்தில் வென்ற 38 எம்.பி.கள் நினைத்தால், அடுத்த ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வைக்க முடியும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஒப்புதலோடு இயற்றப்பட்ட இரண்டு தீர்மானங்கள், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் காத்திருக்கின்றன. அதை அனுப்புமாறு அரசை வலியுறுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். அப்போதும் இல்லையென்றால், இந்தச் சிக்கலை நீதிமன்றத்திடம் கோரலாம். இதை தி.மு.க கூட்டணி எம்.பிகள் மட்டுமல்ல, அ.தி.மு.கவிலிருந்து செல்லும் ஒரு எம்.பியும் செய்ய வேண்டும். ஏனென்றால், அந்தக் கட்சியின் நிலைப்பாடும் அதுதானே?"

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One