அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளை வழங்க மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்டோர் தாக்கல் செய்த பல்வேறு மனுக்களில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஒரு குறிப்பிட்டத் தொகை அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்தும், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்தும் பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்கள் ஏதாவது ஒரு மருத்துவமனையில் தங்களுக்கான அவசர சிகிச்சைப் பெற்றால் அதற்கான செலவுத் தொகையை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறலாம். ஆனால் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலோ, திட்டத்தில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றாலோ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கும் செலவுத் தொகை வழங்கப்படுவதில்லை. எனவே, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவச் செலவுத் தொகையினை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும், வரையறை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றதாகவும் கூறி பலருக்கு மருத்துவச் செலவுகளை அரசு வழங்க மறுத்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்தத் திட்டம் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரீமியத் தொகை இவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, மருத்துவச் செலவுத் தொகையை திரும்பி வழங்க முடியாது என அரசு கூற முடியாது. இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்ப வழங்க மறுத்த அரசின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், மனுதாரர்களின் இந்தக் கோரிக்கையை மாவட்ட குழுக்களுக்கு அரசு மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். அந்தக் கோரிக்கையை 30 நாள்களுக்குள் பரிசீலித்து 6 சதவீத வட்டியுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்தி இருந்தால், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சைப் பெற்றிருப்பர்.
ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தற்போது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். எனவே அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தும் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment