கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் வேளாண், தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகளில் வேளாண், தோட்டக்கலை பட்டயப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. வேளாண் படிப்புக்கு உறுப்புக் கல்லூரிகளில் 290 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 460 இடங்களும் உள்ளன. தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு உறுப்புக் கல்லூரிகளில் 40 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 70 இடங்களும் உள்ளன. இந்த இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், பாடங்களுடன் உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களைப் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்கல்வி பிரிவில் உயிரியல், வேளாண் செயல்முறை பாடங்களைப் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் வேளாண் கல்வி நிலையத்தில் மட்டும் தமிழ் வழியிலும், மற்ற கல்வி நிலையங்களில் ஆங்கில வழியிலும் பாடங்கள் நடத்தப்படும். இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவே பெற முடியும். பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து பிறகு பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை மே 29 -ஆம் தேதி முதல் ஜூன் 28 -ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3 -ஆம் தேதிக்குள் தபால் மூலம் சமர்ப்பிக்கலாம்.
தரவரிசைப் பட்டியல் வரும் ஜூலை 10 -ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422 - 6611345, 6611346 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment