தேசிய திறந்தவெளிப் பள்ளியால் (என்ஐஓஎஸ்) நடத்தப்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 16 ஆயிரத்து 768 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தொடக்கப் பள்ளிகளில் தரமான கல்வியைப் பயிற்றுவிக்க ஏதுவாக உரிய கல்வித்தகுதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் பணியாற்றும் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் அனைவரும் தொடக்கக் கல்வியில் பட்டயப் படிப்பு தேர்ச்சி பெறும் வகையில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய திறந்தவெளிப் பள்ளி நாடு முழுவதும் உள்ள பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்காக டிப்ளமோ இன் எலிமென்டரி எஜூகேஷன் எனப்படும் பட்டயப்படிப்பை நடத்தி வந்தது. இந்தியா முழுவதும் இந்தப் படிப்பை படித்த 12 லட்சத்து 11 ஆயிரத்து 740 ஆசிரியர்களில் 11 லட்சத்து 98 ஆயிரத்து 614 ஆசிரியர்கள் தேர்வெழுதினர். அதன் முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதன்படி நாடு முழுவதும் மொத்தம் 9 லட்சத்து 58,513 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் இந்தப் படிப்பில் சேர்ந்த 25 ஆயிரத்து 456 பேரில் 21,097 பேர் தேர்வெழுதினர். இவர்களில் 16,768 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய திறந்தவெளிப் பள்ளியின் சென்னை மண்டல இயக்குநர் பி.ரவி தெரிவித்துள்ளார். இதேபோன்று புதுச்சேரியில் இந்தப் படிப்புக்கு பதிவு செய்த 303 ஆசிரியர்களில் 196 பேர் தேர்வு எழுதினர். அதில் 146 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வின் முடிவுகளை தேசிய திறந்தவெளிப் பள்ளி அமைப்பின் இணையதளமான www.nios.ac.in , www.died.nios.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்குரிய சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment