எந்தவொரு பள்ளி வாகனங்களிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பு சார்ந்து அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் சார்ந்து தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டுவரும் நிலையில் பள்ளிக் குழந்தைகள் பள்ளி வாகனத்தில் விபத்திற்குள்ளாவது நடைபெற்று வருகிறது.
இவ்வாறாக விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பள்ளி நிர்வாகங்களின் கவனமின்மை காரணமாகப் பள்ளிக் குழந்தைகள் விபத்திற்குள்ளாவது ஏற்புடையதாக இல்லை. எனவே மெட்ரிகுலேஷன் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்
பள்ளிகளின் வாகனங்களை இயக்குவது சார்ந்து மீண்டும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
தனியார் பள்ளிகளின் வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். காப்பீடு உரிய காலத்தில் புதுப்பிக்கப்படுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். பள்ளி வாகனத்தின் முன்னும் பின்னும் பள்ளி வாகனம் என்று பெரிய எழுத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தை இயக்கினால், பள்ளிப் பணிக்காக மட்டும் என வாகனத்தின் முன்னும் பின்னும் தெளிவாக எழுதியிருக்கவேண்டும். வாகனங்களில் பாதுகாப்பு கிரில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மற்ற வாகனங்களிலிருந்து வேறுபாடாகத் தெரியும் வண்ணம் பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, அதில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களுக்கு ஒரு தகுதியான உதவியாளர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். உதவியாளர் இல்லாமல் வாகனத்தை இயக்கக் கூடாது. ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் ஆசிரியர் நிலையில் ஒருவர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இருக்கவேண்டும்.
பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்: எந்தவொரு பள்ளி வாகனத்திலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது. பள்ளி வாகனத்திற்குக் குழந்தைகள் ஏற வரும்போதும், பள்ளி வாகனத்திலிருந்து குழந்தைகள் இறங்கிச் செல்லும் போதும் வாகனத்திற்கு அருகில் குழுந்தைகள் எவரும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே வாகனம் இயக்கப்பட வேண்டும்.
பள்ளி வாகனத்திலிருந்து குழந்தைகளை அவர்களது இருப்பிடத்தில் இறக்கிவிடும்போது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் குழந்தைகளை ஒப்படைத்த பின்னரே அங்கிருந்து வாகனத்தை இயக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் பள்ளியை ஒட்டியுள்ள சாலை, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனங்களை நிறுத்திக் குழந்தைகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது.
பள்ளிக்கு வருகை தந்த ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக அவரவர் வீட்டிற்குச் சென்றடைவதை உறுதி செய்வது பள்ளி நிர்வாகத்தின் தலையாய கடமையாகும். இதிலிருந்து தவறி கவனமின்மை காரணமாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதற்கு பள்ளி நிர்வாகமே முழுப்பொறுப்பேற்க நேரிடும் என அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment