ரயில்வேயில் துறை சார்ந்த போட்டித் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதலாம் என்று ரயில்வே வாரியம் தெளிவு படுத்தியுள்ளது.
ரயில்வேயில் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் அவர்கள் பணியாற்றுகின்ற பதவிகளுக்கான தர ஊதியத்தை விட கூடுதலான தர ஊதியமுள்ள பணிகளுக்கு துறை ரீதியான தேர்வு எழுதி பதவி உயர்வு பெறுவதுதான் துறை சார்ந்த பொதுப் போட்டி என்று அழைக்கப்படுகிறது.
இந்த போட்டித் தேர்வுகள் அண்மையில் தெற்கு ரயில்வேயில் 96 சரக்கு ரயில் கார்டு- பதவிகளுக்கு நடைபெற்றது. இதேபோன்று, இளநிலை எழுத்தர் பணிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. இதுபோன்ற துறை ரீதியான தேர்வுகள் தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடைபெற்று வந்தன. இந்தத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், ரயில்வே வாரியம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வு ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது.
எனவே, துறை சார்ந்த பொதுப்போட்டித் தேர்வை அந்தந்த மாநில மொழிகளில் எழுத ஆட்சேபம் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவேற்பு: இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க துணைபொதுச்செயலாளர் மனோகரன் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருவதால், இந்தப் பதவி உயர்வு தேர்வுகளிலும் ஹிந்தி மொழியில் எழுதி எளிதாக தேர்வு எழுதி, பதவி உயர்வு பெற்று விடுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலம் மொழியில் எழுதுவதால், போட்டி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பதவி உயர்வு பெற முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது மாநில மொழியிலும் தேர்வு எழுதும் வாய்ப்புக் கிடைத்துள்ளதால், தமிழகத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியில் பதவி உயர்வுக்கான துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை எழுதி, கூடுதல் மதிப்பெண்கள் பெற்று, பதவி உயர்வு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கக்கூடிய விஷயம் என்றார் அவர்.
No comments:
Post a Comment