-ேஹாம் ஒர்க் முதல், டீம் ஒர்க் வரை அனைத்து செயல்பாடுகளையும், 'ஆன்லைன்' மயமாக்கி, தனியார் பள்ளிகளையே துாக்கி சாப்பிடும் அளவுக்கு, ஸ்மார்ட்டாக மாறியுள்ளது, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 320 மாணவர்கள் படிக்கின்றனர்.
12 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இவர்களின் பணிப்பதிவேடு, பள்ளியின் செயல்பாடுகள், மாணவர்களின் விபரங்கள் என, அனைத்து தகவல்களும், தற்போது 'ஆன்லைன்' மயமாக்கப்பட்டுள்ளன.அனைத்து கோப்புகளுக்கும், டிஜிட்டல் வடிவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வீட்டுப்பாடம், மாணவர்களின் வருகைப்பதிவு, விடுப்பு விண்ணப்பம், வகுப்பு நிகழ்வுகள் என, 19 வகையானபள்ளி செயல்பாடுகளை,பெற்றோர் பார்வையிடலாம். பெற்றோர் தங்களது சந்தேகங்கள், கருத்துகளை பதிவிட்டு, விளக்கம் பெறவும் வசதி உள்ளது.இதோடு, பள்ளியில் நடக்கும் நிகழ்வுகளின் புகைப்படங்கள், வீடியோ தொகுப்புகளையும், இதில் பதிவேற்ற வசதி உள்ளது.
இதன் மூலம் பள்ளியின் அனைத்து செயல்பாடுகளையும், ஆவணப்படுத்த முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் மைதிலி கூறுகையில், ''எங்கள் பள்ளியில், ஸ்போக்கன் இங்கிலீஷ், தற்காப்பு கலை, கணினி வழி கல்வி என தனியார் பள்ளிகளுக்கு இணையான, அனைத்தும் கற்பிக்கப்படுகிறது.
பள்ளியின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தி, டிஜிட்டல்மயமாக்க திட்ட மிட்டோம்.மை ஸ்கூல் டைரி எனும் நிறுவனம் தாமாக முன்வந்து, இத்திட்டத்தை இலவசமாக செயல்படுத்தியுள்ளது. இதில், பெற்றோருக்கு பிரத்யேக பயனர் பெயர், கடவுசொல் உள்ளது. இதை அவர்களின் ஸ்மார்ட் போனில் பதிவு செய்தால், பள்ளியின் அனைத்து செயல்பாடுகளையும், பார்வையிட முடியும். விரைவில் நடக்கவுள்ள பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தில், இது குறித்து பெற்றோருக்கு விளக்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment