17 ஆண்டுகளாக படகோட்டி, மலையேறிச் சென்று பழங்குடிகளுக்கு பாடம் கற்பிக்கும் கேரள ஆசிரியருக்குத் தமிழ்நாட்டில் சிறப்பு விருது அண்மையில் வழங்கப்பட்டது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஆம்பூரி என்ற பகுதியில் இருக்கும் மலைப்பகுதி குன்னத்து மலை. அங்கு வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கு 17 ஆண்டுகளாகப் பாடம் சொல்லித் தருகிறார் ஆசிரியை உஷா குமாரி.
அவருக்கு, திருநெல்வேலி அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை சார்பில் 'சிறந்த சமூக செயல்பாட்டிற்கான அறம்' விருது அண்மையில் வழங்கப்பட்டது. இந்த விருதை திருநெல்வேலி சட்டம் & ஒழுங்கு, காவல் துணை ஆணையர் ச. சரவணன் வழங்கினார்.
இதுகுறித்து 'இந்து தமிழ் 'இணையதளத்திடம் ஆசிரியை உஷா குமாரி பேசும்போது, ''1999-ல் குன்னத்து மலையில் இப்பள்ளி தொடங்கப்பட்டது. நான் 2002-ம் ஆண்டில் இங்கு பணிக்குச் சேர்ந்தேன். ஒவ்வோர் ஆண்டும் 10-க்கும் அதிகமான பழங்குடியினக் குழந்தைகள் இங்கு படித்து வருகின்றனர்.
1 முதல் 4-ம் வகுப்பு வரை இங்கு உள்ளது. 5-ம் வகுப்புக்கு அவர்கள் விடுதி வசதி உள்ள பள்ளிகளுக்குச் சென்று படிக்க வேண்டும். தினந்தோறும் ஆறு, மலை ஆகியவற்றைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்லமுடியும். இதனால் இங்கு வர ஆசிரியர்கள் தயக்கம் காட்டினர்.
எனக்கு இயற்கை மிகவும் பிடிக்கும் என்பதால் 17 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் பணிபுரிகிறேன். படகை ஓட்டுவதோ, மலையேறி பள்ளிக்கு வருவதாக சிரமமாகத் தெரியவில்லை. பிடித்தால் எதுவும் நமக்கு சிரமமாகத் தெரியாது.
ஊடகங்களில் இதுகுறித்து வெளியான செய்தியைப் பார்த்து எனக்கு தமிழகத்திலும் விருது வழங்கப்பட்டுள்ளது'' என்று சிரிக்கிறார் ஆசிரியை உஷா குமாரி.
- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
No comments:
Post a Comment