ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது.
1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் ஆகிய மொழிவாரி மாநிலங்கள் நவம்பர் 1 ஆம் தேதி பிரிந்து சென்றன. இந்த நாளை அந்த மாநிலங்களில் மாநிலம் பிறந்த நாளாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையிலும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, 110 விதியின் கீழ் கூட்டுறவு, பொதுப்பணித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பல அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என்ற மாபெரும் சிறப்பு அறிவிப்பினை முதல்வர் அறிவித்தார்.
மேலும், தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் இருக்கை அமைக்கப்படும். திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1 ஆம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தினமாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்நாளினை கொண்டாடுவதற்காக, ரூ 10 லட்சம் நிதியையும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரலாறு என்ன?: இன்றைய 'தமிழ்நாடு மாநிலம்' அன்று 'மதராஸ் மாகாணம்' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்படி கூப்பிடவே கூடாது அதனை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றுங்கள் என்று கூறி நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் தியாகி சங்கரலிங்கனார். மொழிக்காக 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த போராளி தியாகி சங்கரலிங்கனார் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் தன் வீட்டு வாசற்படியிலேயே உண்ணாவிரதம் இருந்து வந்தார். இவர் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் செய்திகள் தீப்பொறியாக நாடு முழுவதும் பரவியது. காங்கிரஸ் கட்சிக்கு கொதிநிலை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
ஒவ்வொரு தலைவராக சங்கரலிங்கனாரை நோக்கி ஓடிவந்தனர். உண்ணாவிரதம் வேண்டாமே நிறுத்தி கொள்ளுங்கள் என்று ம.பொ.சிவஞானம், காமராசர், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா என பல தலைவர்கள் கோரிக்கை வைத்தும், அசைந்து கொடுக்காத சங்கரலிங்கம், இறுதியாக அறிஞர் அண்ணாவிடம், "அண்ணா! நீங்களாவது என்னுடைய 'தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன் என்றவர், ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா?" என்று ஏக்கத்துடன் கேட்டார். 76-வது நாள் உடல்நிலை மிகவும் சோர்வடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே சங்கரலிங்கனாரின் உயிரும் நம்மைவிட்டு பிரிந்தது. அப்போது அவருக்கு 78 வயது.
தமிழ்நாடு மாநிலம் என பெயர் மாற்றம்கோரி கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் மறைவும் தமிழக அரசியலில் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அனைத்து தரப்பிலும் 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம்கோரி அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால் அன்றைய காங்கிரஸ் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.
1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, 'மதராஸ் மாகாணம்' என்ற பெயரை 'தமிழக அரசு' என பெயர் மாற்றி வரலாறு படைத்தது. அதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18 ஆம் தேதி மதராஸ் மாகாணம் என்பதை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது வரலாறு.
No comments:
Post a Comment