லீவ் லெட்டரில் எழுத்துப்பிழைகள் பார்க்கும் ஆசிரியர்களைத்தான் நாம் பார்த்திருப்போம். அதனால் மிக வழக்கமான காரணத்தையே பிழையில்லாமல் எழுதிவிடலாம் என்ற மனநிலை மாணவர்களுக்கு எழுவது இயல்பாகிவிட்டது. அதாவது, தலைவலி என்றாலும், திருமணத்துக்கு ஊருக்குச் செல்வதென்றாலும் லீவ் லெட்டரில் `i am suffering from fever... என்றுதான் எழுதுவார்கள். இந்தச் சூழலை சரிசெய்ய வேண்டியது ஆசிரியர்களின் பணிதான். அப்படியான சிறப்பான முன்னெடுப்புகளைச் சில ஆசிரியர்கள் செய்தும் வருகிறார்கள்.
தேனி மாவட்டம், பூசனையூத்து எனும் கிராமத்து அரசுப் பள்ளி மாணவன் ஈஸ்வரன், தனது விடுமுறைக்கான காரணமாக, `அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டிலுள்ள கால்நடைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என எழுதியிருந்தார். அந்த லீவ் லெட்டரை ஆசிரியர் வெங்கட் பெருமையுடன் வெளியிட்டிருந்தார். அதேபோல திருவாரூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவன் உண்மையான காரணத்தைச் சொல்லி லீவ் வெட்டர் எழுதியிருக்கிறார். என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் பார்க்கும் முன், அவர் படிக்கும் பள்ளியைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.
திருவாரூர் மாவட்டம், மேல ராதாநல்லூர் எனும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கல்வி வட்டாரத்தில் பிரபலமானது. அப்பள்ளியின் ஆசிரியர் மணிமாறன், மாணவர் நலன்சார்ந்த பல்வேறு விஷயங்களை முன்னெடுத்துவருபவர். அதற்காகப் பல விருதுகளையும் பெற்றவர். குறிப்பாக, மாணவர்களோடு உரையாடுவதற்கான பலவித வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருபவர்.
எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரையும் பள்ளிக்கு அழைத்துவந்து பேச வைப்பார். தன்னிடம் நேரடியாகச் சொல்ல முடியாத கருத்துகளைத் தெரிவிப்பதற்கு `கருத்துச் சுதந்திரப் பெட்டி' வைத்து எழுதிப்போடச் சொல்வார். அவற்றில் எழுதப்பட்டவற்றைக் கொண்டு பல பிரச்னைகளை, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட சக ஆசிரியர்களின் உதவியோடு களைந்துள்ளார்.
ஆசிரியர் மணிமாறனுக்கு நேற்று ஒரு லீவ் லெட்டர் வந்தது. அதைப் படித்ததும் ரொம்பவே மகிழ்ச்சியாகிவிட்டார். எட்டாம் வகுப்பில் படிக்கும் தீபக் எழுதிய அக்கடிதத்தில், `எனது ஊரில் கபடிப் போட்டி நடைபெற்றது. நான் அங்கு சென்று பார்த்தேன். அதனால், எனது உடல் சோர்வாக உள்ளதால் இன்று மட்டும் விடுப்புத் தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று விடுமுறைக்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார். இக்கடிதம் பார்த்து மகிழ்ச்சியடைய என்ன காரணம் என்று, ஆசிரியர் மணிமாறனிடம் பேசினேன்.
``ஆசிரியர் - மாணவர் உரையாடும்போதுதான் கற்றல் முழுமையடையும். அப்படியான உரையாடல் நடக்கவேண்டுமெனில், ஆசிரியர் மீதான அச்சம் குறைந்து, நம்பிக்கை வர வேண்டும். அதற்கான பணிகளைத்தான் செய்துவருகிறோம். தீபக் தனது விடுமுறைக்கான உண்மையான காரணத்தை நான் ஏற்றுக்கொள்வேன் என்று நம்பியதே எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. தீபக் மிகுந்த பொறுப்புள்ள மாணவன். விளையாட்டைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ரொம்பவே ஈடுபாடு காட்டுபவன்.
அந்த ஆர்வத்தால்தான் கபடிப் போட்டியைப் பார்க்கச் சென்றிருப்பான். பாடப்புத்தகம் அல்லாத கதை, அறிவியல் நூல்களைக்கூட விரைவாகப் படித்துவிடுவான். குறிப்பாக, சூழலியல் புத்தகம் படிப்பதற்கு ஆர்வம் காட்டுவான். இப்போது வெளியான `நீலத்தங்கம்' நூலைக்கூடப் படித்துவிட்டான். யார் தவறு செய்தாலும் நேரடியாக அவரிடமே கேட்பான். அது நானாக இருந்தாலும்கூட. வெளியே சென்றால், மாணவர்களைப் பொறுப்புடன் பார்த்துக்கொள்வான். இந்த லீவ் லெட்டர் மட்டுமல்ல, அவனின் மற்ற நடவடிக்கைகளையும் சேர்த்துப்பார்க்கும்போது மகிழ்ச்சியும் பெருமையுமாக இருக்கிறது" என்கிறார் மகிழ்ச்சியுடன்.
No comments:
Post a Comment