எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அன்பாசிரியர் சுடரொளி- குழந்தைகளைக் கொண்டாடி, குடும்ப சூழல் அறிந்து கற்பிக்கும் ஆசிரியை!

Sunday, December 29, 2019


சிறந்த ஆசிரியர் மாணவர்களின் நிகழ்காலத் திறமைகளைப் பார்க்கிறார்; தலைசிறந்த ஆசிரியர் மாணவர்களின் கடந்த கால சோதனைகளையும் உணர்கிறார்.

குழந்தைநேய வகுப்பறை, பள்ளி- ஊர் மக்கள் உறவு மேம்பாடு ஆகியவற்றோடு, சக ஆசிரியர்கள் மனதிலும் அவர்கள் அறியாமலேயே உத்வேகத்தை விதைத்து வருபவர் ஆசிரியர் சுடரொளி. இதற்காக சுமார் 10 ஆண்டுகளாக மாதந்தோறும் ஆசிரியர்களைக் கூட்டி, கலந்துரையாடலை நிகழ்த்தி வருகிறார். இதில் குழந்தைகளின் உரிமைகள், ஆசிரியர்- மாணவர் உறவு, கற்றல் - கற்பித்தலுக்கான இடைவெளியைக் குறைப்பது உள்ளிட்ட அத்தியாவசிய, ஆரோக்கியமான விவாதங்கள் நிகழ்ந்து, மாற்றத்துக்கான பூக்களும் மலர ஆரம்பித்து இருப்பதாய்ப் பெருமை கொள்கிறார் ஆசிரியர் சுடரொளி.

சுவாரசியங்களும் படிப்பினைகளும் நிறைந்த அவரின் ஆசிரியப் பயணம் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது. ''உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் வாங்கிய மதிப்பெண்களுக்கு ஆசிரியப் பயிற்சிக்கான இடம்தான் கிடைத்தது. பெரிதாக ஆர்வம் இல்லாமல்தான் படித்தேன். திருமணமாகி கருத்தரித்தபோது குழந்தைகள் குறித்த சிந்தனை அதிகமானது.

கல்வியாளர்கள் மாண்டிசோரி, ரூசோ, ப்ரொஃபெல் குறித்தும் அவர்கள் அறிமுகப்படுத்திய கல்வி முறைகள் பற்றியும் நுணுக்கமாகப் படித்தேன். எனக்கு மனப்பாடம் செய்யத் தெரியாததால் 12-ம் வகுப்பில் முதல் முறையாக ஃபெயில் ஆனேன். ஆனால் நான் முட்டாள் இல்லை என்பதை உணர்ந்திருந்தேன். கல்வி முறையில் மாற்றத்தை நிகழ்த்தவும் குழந்தைநேயப் பள்ளிகளை உருவாக்கவும் எண்ணி அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனேன்.

2004-ல் விழுப்புரம் அரளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முதல் பணியில் சேர்ந்தேன். கிராமம் என்பதால் அங்கு என்ன வசதிகள் இருந்ததோ அதைக் கற்பித்தலுக்கு முழுமையாகப் பயன்படுத்தினேன். ஏரி, ஆலமரம் ஆகியவற்றுக்கு நேரடியாக மாணவர்களை அழைத்துச் செல்வேன். சிறகு பொறுக்குவது, பறவைகளைப் பார்ப்பது, அவற்றின் ஒலிகளைக் கவனிப்பது, தபால் அலுவலகம் செல்வது எனப் பொழுதுகள் நீளும்.

தரையில் அமர்ந்து கற்பிக்கும் ஆசிரியர்!

அங்கு இலுப்பை மரங்கள் அதிகம் என்பதால், அவற்றின் கொட்டைகளைச் சேகரித்து, கோத்து மணியாக்குவோம். அதைக் கொண்டு கணக்கு சொல்லிக் கொடுப்பேன். இத்தனை வருட ஆசிரியப் பணியில் நாற்காலியில் அமர்ந்து பாடம் நடத்தியதில்லை. குழந்தைகளை வட்ட வடிவில் அமரவைத்து, நானும் தரையிலேயே உட்கார்ந்து கற்பிப்பேன். தேவைப்படும்போது மட்டும் எழுந்து, கரும்பலகையில் எழுதிவிட்டு மீண்டும் தரையில் அமர்வது வழக்கம். குழந்தைகள் உட்கார சேர்கள் வாங்கிய பிறகு, அவர்களின் குட்டி சேரிலேயே நானும் அமர்ந்துகொள்வேன்'' என்று அதிசயப்படுத்துகிறார் அன்பாசிரியர் சுடரொளி.

அவர் வரையறுக்கும் குழந்தைநேயப் பள்ளி அடிப்படைக் கட்டமைப்பு, குடிநீர், கழிப்பறை வசதிகள், மாணவர்கள் பயணிக்கும் வழியில் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. அதேபோல வகுப்பறையின் காற்றோட்டம், வெளிச்சம், கற்பித்தல், ஆசிரியர் - மாணவர் இடையிலான உறவு, கலைகள் கற்றல், அடிப்படை கணினி அறிவு, பாலியல் விழிப்புணர்வு, குழந்தை உரிமைகள் ஆகியவை குழந்தைநேய வகுப்பறையின் அடிப்படையாக உள்ளன.

இதுகுறித்து இன்னும் விரிவாகப் பேசும் அவர், ''குழந்தைகளின் மனநிலையை அறிந்து கற்பித்தலை நிகழ்த்தும் ஆசிரியர்கள்தான் இன்றைய தேவை. நான் படிக்கும்போது, 'நீ சாப்பிட்டாயா?' என்று கேட்ட 1-ம் வகுப்பு ஆசிரியைதான் இன்றுவரை என் ஆதர்சமாக இருக்கிறார். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு குடும்பச் சூழல் இருக்கும். அதை அறியாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகக் கற்பிப்பது சரியல்ல. இதற்காக என் வகுப்புக் குழந்தைகளின் உடல், மன நலன், குடும்பச் சூழல் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளேன்.

மாணவர் வீட்டுக்குச் செல்வது கட்டாயம்
இதற்காக ஆண்டுக்கு இரு முறையாவது எல்லாக் குழந்தைகளின் வீடுகளுக்கும் கட்டாயம் செல்வேன். அவர்களின் பெற்றோருடன் பேசுவேன். அந்தவகையில் ஒருமுறை சிறுவனுக்கு எச்ஐவி இருந்ததைக் கண்டுபிடித்தேன். அப்பா திடீரென இறந்துவிட, அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரும் சிலநாட்களில் இறந்துவிட, சிறுவன் பாட்டியிடம் வளர்ந்தான். இந்த சூழலை அறிந்து அவனுக்குப் பரிசோதனைகள் எடுக்க அழைத்துச் சென்றோம். முடிவில் உண்மை தெரியவந்தது. இப்போது சரியான மருந்துகளை எடுத்துக்கொண்டு அவர், 24 வயது இளைஞராக இருக்கிறார்.

மாணவர்களின் வீடு செல்லும் வழியில் விதவிதமான அனுபவங்களை எதிர்கொண்டேன். நடுநிலைப்பள்ளி மாணவி ஒருவர் பருவமடைந்து விட்டார். அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். வழி முழுவதும், 'நான் பாத்துக்கறேன் டீச்சர்; நீங்க போங்க!' என்று சொல்லிக்கொண்டே வந்தாள். வீட்டுக்கு அருகே வந்தால்.. அது வீடே இல்லை. ஒரு படல் மட்டுமே இருந்தது. இதுதெரியாமல் 'வீட்டுச் சாவி இருக்கா?' என்று கேட்டுக்கொண்டே வந்தேன். குற்றவுணர்ச்சி காந்தியது. குழந்தைகளின் குடும்பச் சூழல் அறியாமல் பொதுப்படையாகவே அவர்களுக்குக் கற்பிக்கிறோம்.

வீட்டுக்குப் பூட்டே இல்லாதவர்கள் பாடங்களில் பீரோவையும் கட்டிலையும் படிக்க வேண்டியிருக்கிறது. 'குளிக்கவில்லை, டாய்லெட் போகவில்லை' என்று மாணவர்களைத் திட்டும் ஆசிரியர்கள் அதற்கான சூழல் வீட்டில் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அன்றில் இருந்து ஒவ்வொரு குழந்தையின் விவரங்களைச் சேகரித்துக் கொள்வேன். இன்றுவரை அதைச் செயல்படுத்தி வருகிறேன்'' என்கிறார்.

பள்ளிக்கும் சமூகத்துக்குமான தொடர்பு

பள்ளிக்கும் அப்பகுதி மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தால் மட்டுமே, பள்ளி சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை உணர்ந்திருக்கும் ஆசிரியர் சுடரொளி, இரண்டு தரப்புக்குமான தொடர்பை உருவாக்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்துப் பேசுபவர், ''அடுத்ததாக கரிக்களவாக்கம் பள்ளிக்கு மாற்றல் கிடைத்தது. அங்கே பள்ளிக்கு நிறைய பாம்புகள் அடிக்கடி வந்துகொண்டிருந்தன. பள்ளிக்குப் பின்னால் இருந்த புதர்கள், அவற்றுக்குக் காரணமாக இருந்தன. ஊர் மக்கள், தங்களின் பயன்பாட்டுக்காக அவற்றை அகற்ற விடவில்லை. பாம்பு வரும்போதெல்லாம் போட்டோ, வீடியோக்கள் எடுத்தோம். சுமார் 1 மாதத்தில் தண்ணீர் பாம்பில் இருந்து கருநாகம் வரை 9 பாம்புகள் வந்திருந்தன. அவற்றைத் தொகுத்து ஊர் மக்களிடம் காண்பித்தோம். நாகம் தீண்டியிருந்தால் என்ன செய்வது? என்று கேட்டோம்.

அடுத்த நாளே ஊர் இளைஞர்களின் ஆதரவுடன் புதர்கள் அகற்றப்பட்டன. அடுத்ததாக பள்ளியில் நூலகம் அமைக்கத் திட்டமிட்டோம். இதுகுறித்து குழந்தைகளிடம் பேசி, அவர்களையே பதிப்பகத்தாரிடம் பேச வைத்தேன். கிடைத்த 400 புத்தகங்களைக் கொண்டு நூலகம் அமைக்கப்பட்டது. கிராமத்தாருடன் இன்னும் நெருங்க, பள்ளியிலே தக்காளி பயிரிடும் செயல் திட்டத்தைத் தொடங்கினேன். எங்களின் ஆர்வத்தைப் பார்த்த ஒருவர், பயிரிடும் வரை 5 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கினார். அதேபோல 12 வகையான கீரைகளும் பள்ளி வளாகத்தில் பயிரிடப்பட்டன. இதனால் ஊர் மக்களுக்கும் எங்களுக்குமான பேச்சு, உறவு வளர்ந்தது. இந்த செயல் திட்டங்களைத் தொகுத்து டிஎஃப்சிக்கு அனுப்ப, ரூ.50 ஆயிரம் கிடைத்தது. அதைக் கொண்டும் பள்ளியை மேம்படுத்தினோம்.

அடுத்ததாக 'நேர்மை சந்தை'யை மாணவர்களிடத்தில் அறிமுகம் செய்தோம். ஆண்டுக்கு ஒருமுறை பாரிமுனை சென்று 5 ஆயிரம் ரூபாய்க்கு பூ, காய், பழம், ஸ்டேஷனரி, கீரைகள், கைக்குட்டை போன்றவற்றை மொத்தமாக வாங்கிக்கொள்வேன். ஜூஸ், சாலட்டை நானே வீட்டில் தயாரித்து விடுவேன். அவற்றைப் பள்ளிக்குக் கொண்டு சென்று 1-ம் வகுப்பு மாணவர்களை விற்கச் சொல்வேன். ஒவ்வொரு மாணவரும் ஒரு கடைக்குப் பொறுப்பு. ஸ்டேஷனரியை மட்டும் 2 பேர் பார்த்துக்கொள்வர். ஒவ்வொரு பொருளுக்கும் சிறிய லாபம் வைத்து 1 முதல் 5 ரூபாய் வரை விற்கப்படும்.

மாணவர்களும் ஆசிரியர்களும் இவற்றை வாங்கிக்கொள்வர். காசில்லாத குழந்தைகளிடம் நானே காசு கொடுத்து, எதையாவது வாங்கச் சொல்வேன். இதுவரை போட்ட ரூ.5 ஆயிரம் முதலுக்கு, நட்டம் ஏற்பட்டதில்லை. சிற்சில பொருட்கள் காணாமல் போய் இருக்கின்றன. அவை லாபத்தின் மூலம் ஈடு செய்யப்படும். கடை நடத்தும் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவர். காய்கறி, கீரை உள்ளிட்ட பொருட்கள் அதிகம் விற்பனையாகாது என்பதால், அவற்றின் சத்துகள், பயன்களைச் சொல்லி மற்ற குழந்தைகளும் உடன் நின்று விற்பர். இதன் மூலம் ஒற்றுமை உணர்வு, நிதி மேலாண்மை, பொறுப்பு, நேர்மை, ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு குழந்தைகளுக்கு ஏற்பட்டது. இதைக் கண்கூடாகவே உணர்ந்திருக்கிறேன்.

கற்றலில் வகைமை
பொதுவாக 9 வகையான நுண்ணறிவு மனிதர்களிடத்தில் உள்ளன. இதில் எது தூக்கலாக இருக்கிறதோ, அதை அடிப்படையாகக் கொண்டே கற்றல் நிகழும்.

1. உடலியக்க நுண்ணறிவு Bodily-kinesthetic (body smart)
2. தர்க்க நுண்ணறிவு Logical-mathematical (number/reasoning smart)
3. மொழி சார்ந்த நுண்ணறிவு Linguistic (word smart)
4. இடம் பொருள் சார்ந்த நுண்ணறிவு Existential (life smart)
5. இசை சார்ந்த நுண்ணறிவு Musical (sound smart)
6. தன்னை அறியும் நுண்ணறிவு Intra-personal (self smart)
7. பிறரை அறியும் நுண்ணறிவு Interpersonal (people smart)
8. இயற்கை சார்ந்த நுண்ணறிவு Naturalist (nature smart)
9. படம் சார்ந்த நுண்ணறிவு (picture smart)

உதாரணத்துக்கு சில குழந்தைகள் இசை சார்ந்து, படங்கள் சார்ந்து கற்பித்தால் உடனடியாக கிரகித்துக்கொள்வர். புத்தகத்தை வைத்துப் படிக்க முடிகிற குழந்தைக்கு, ப்ரொஜெக்டர் வழிக் கல்வி ஏதுவானதாக இருக்காது. துறுதுறுவென உடலியக்கம் சார்ந்து செயல்படும் குழந்தைகளை வெறுமனே உட்கார வைத்துக் கற்பிக்க முடியாது. அவர்களுக்கு அடிப்படை எழுத்துகளைத் தரையில் எழுதி, அதைத் தாண்ட வைக்கலாம். குதித்து விளையாடச் சொல்லிக் கற்பிக்கலாம்.

சக ஆசிரியர்கள் மேம்பாடு
நம்முடன் பணியாற்றும் ஆசிரியர்களை மேம்படுத்துவது குறித்துப் பெரும்பாலான ஆசிரியர்கள் யோசித்திருக்க மாட்டார்கள். நம்மிடம் படிக்கும் குழந்தைகள், நாம் செதுக்கும் மணிகள், நாளை அவர்களிடம்தான் படிப்பார்கள். அதனால் அவர்களுக்கும் கற்பித்தலைக் கடத்துவது அவசர, அவசியம். ஆனால் அதை அவர்களைப் புண்படுத்தாமல், தாழ்வாக நினைக்க விடாமல் மேற்கொள்ளவேண்டும்.

இதனால் சக ஆசிரியர்களுடனான புரிதலில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும். இதை என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். எந்த ஆசிரியருடனும் எனக்கு இதுவரை முரண் ஏற்படாததற்கு இதுவே காரணம்.

மேலே சொன்ன அனைத்துக் காரணிகளுடன் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தாலும் மற்ற ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன். இதுதான் என்னைப் புத்துணர்ச்சியுடன் அடுத்த அடியை எடுத்து வைக்கத் தூண்டுகிறது'' என்று கூறி புன்னகைக்கிறார் அன்பாசிரியர் சுடரொளி.

ஆசிரியர் சுடரொளி - 95001 26763
-க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

1 comment

  1. ஆசிரியரைப்போலவே மாணவச் செல்வங்களும் சுடரொளியாக மிளிரட்டும்.நானும் உங்களைப் போலவே... வாழ்த்துக்கள்.

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One