அன்னவாசல்,ஜன.13: வேட்டி,சேலை அணிந்து சீர் கொண்டு வந்து பொங்கல் பண்டிகையை உருவம்பட்டி அரசுப் பள்ளி மாணவ,மாணவியர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
விவசாயிகளுக்கும்,கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.அதே போல இந்த ஆண்டும் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி புதன்கிழமை தைப்பொங்கல் பொங்கல் பண்டிகையும், 16 ஆம் தேதி வியாழக்கிழமை மாட்டுப் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது.
பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மாணவ,மாணவிகளிடையே சமத்துவம்,சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி ,கல்லூரிகளில் மாணவ,மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடி வருகிறார்கள்.இதே போல் குடுமியான்மலை அருகே உள்ள உருவம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல்விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் மாணவ,மாணவிகள் அனைவரும் வேட்டி ,சேலை அணிந்து வெண்கலபானை,கரண்டி ,பச்சரிசி ,வெல்லம் ,முந்திரி ,திராட்சை,பருப்பு ,நெய்,பருப்பு,கரும்பு என பொங்கல் சீர்வரிசைப் பொருட்களுடன் பள்ளி வந்திருந்தனர்.பின்னர் மாணவிகள் பொங்கல் பானையில் பொங்கல் வைத்தும்,குலவை சத்தமிட்டும் விழாவை கொண்டாடினர்.பின்னர் கரும்புகளை முக்கோண வடிவில் அமைத்து அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து கும்மியடித்து மகிழ்ந்தனர்.அதன் பிறகு மாணவர்கள் ஒருவருக்கொருவர் பொங்கலை கொடுத்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தொடர்ந்து சாக்கு ஓட்டம்,ஊசியில் நூல் கோர்த்தல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.நிறைவாக மாணவ,மாணவிகளின் சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன்,பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு கரும்பு,பொங்கல் வழங்கினர்.
குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் வயலோகம் ஜெயராஜ்,முக்காணமலைப்பட்டி பழனிவேல்,ஒருங்கிணைந்த கல்வியின் மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை,வட்டார வளமைய பயிற்றுநர்கள் பழனியப்பன்,நிலையப்பட்டி தலைமைஆசிரியர் மன்றம் ந.ரவிச்சந்திரன்,மரிங்கிப்பட்டி தலைமை ஆசிரியை நாகலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் குடுமியான் ஊராட்சிமன்றத்தலைவர் விசலூர் கருப்பையா,ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மனோஜ்குமார்,உருவம்பட்டி வார்டு உறுப்பினர்கள் கருப்பையா,முத்தன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ராஜேந்திரன் ,கருப்பையா மற்றும் ஏராளமான ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித்தலைமையாசிரியர் ஜெ.சாந்தி,இடைநிலை ஆசிரியர் கு.முனியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment