அன்பு மாணவர்களே... உலகம் முழுவதும் 7.2 கோடி குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியே கிடைக்கவில்லை என்றும் 75.9 கோடி சிறுவர், சிறுமிகளுக்கு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் ஐ.நா.வின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மத்தியகிழக்கு பிராந்திய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியாவின்வடக்கு மாநிலங்களில் உள்ள பல கிராமங்களில் பள்ளிகளே இல்லை. ஆனால், நாம் வாழும் சூழ்நிலை நல்ல வேளையாக அப்படியாக அமையவில்லை.
அதற்கே நாம் முதலில் நிம்மதி அடைந்து கொள்ளவேண்டும். அதற்கு அடுத்ததாக நம் கிராமங்களிலேயே மேல்நிலை வகுப்புகள் வரை படிக்கும் வசதி தமிழகத்தில் உள்ளது. அதற்காக நம்முடைய பல அரசியல் தலைவர்கள் போராடி இருக்கிறார்கள் என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள் மாணவர்களே.
அவர்கள் பட்ட கஷ்டத்தினால் நமக்கு எளிமையாக கிடைத்த கல்வியை நாம் சுகமாக அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், சரியாக பயன்படுத்துகிறோமா என்பதையும் சிந்தித்து பார்க்கவேண்டும் மாணவர்களே. ஏனென்றால், பல நாட்டு குழந்தைகளுக்கு எட்டாத கனியாக இருக்கும் கல்வி,
நமக்கு கையிலேயே இருந்தும் அதை வீணடித்து விடக்கூடாதல்லவா. வகுப்பறை தூக்கம்மட்டுமல்ல, கவனம் சிதறலும் வாழ்க்கையை கெடுத்துவிடும். ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் எடுக்கும்போது அதை கவனிக்க விட்டதினால்தான் பொதுத் தேர்வு நெருங்கும்போது பல பாடங்கள் நம்மை அச்சுறுத்துகின்றன.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அதை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினாலே, பாதி மதிப்பெண்களுக்கு சரியாக தேர்வு எழுதியாற்று என்று அர்த்தமாகும். மீதி மதிப்பெண்களுக்கு பாடத்தை வாசித்தாலே போதும்.
நம் பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு நம்மை படிக்க வைக்கிறார்கள் என்பதை ஒரு நிமிடம் நினைத்து பார்த்து, கவனத்தை சிதறவிடாமல் கரும்பலகையில் கவனம் செலுத்துங்கள் மதிப்பெண்கள் மட்டுமில்லை அந்த வானமும் வசப்படும்.
No comments:
Post a Comment