தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு ஊக்குவிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதே வேளையில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 644 கோடி ஒதுக்கியது அந்தப் பள்ளிகளை இன்னும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கை ஆகும். இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து அவற்றைப் படிப்படியாக மூடும் நிலை ஏற்படும்.
தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஒதுக்கீடு செய்யும் நிதியை அரசு பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கீடு செய்திருந்தால் அவற்றில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். மேலும் மாணவர்களை நல்ல முறையில் கல்வி கற்க ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் அளித்து செயல்பட வைத்தாலே அனைத்து தரப்பு பெற்றோர்களும் அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்கும் நிலை உருவாகும்.
ஆண்டு இறுதித் தேர்வு நெருங்குவதை கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான 17 பி நடவடிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
Thank u sir
ReplyDeleteThanks
ReplyDelete