2015ஆம் ஆண்டில் என் மகனை முதல் வகுப்பிலேயே எங்கள் பள்ளியில் சேர்க்க நினைத்தேன். ஆனால் போக்குவரத்து காரணங்களால் சேர்க்க முடியவில்லை. ஏனெனில் நான் வசிக்கும் ஊரிலிருந்து( முசிறி ) எங்கள் பள்ளி( மு.களத்தூர் ) 30கிமீ தொலைவில் உள்ளது. பேருந்தில் சென்று பின்பு வண்டியிலும் 4கிமீ உள்ளே செல்லவேண்டும்.
சென்ற 2018ஆம் ஆண்டில் என் தந்தை எனக்கு கார் ஒன்றை பரிசளித்தார். அதன் பிறகு மகனையும் , மகளையும் காரில் நம் பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம் என்று தோன்றியதால் அவர்களை சென்ற ஆண்டு( 2019 ) எங்கள் பள்ளியிலேயே மகனை ஐந்தாம் வகுப்பிலும், மகளை இரண்டாம் வகுப்பிலும் தமிழ் வழிக் கல்வியில் சேர்த்தேன்.
காரில் செல்வது சில மாதங்கள் வரை சற்று பயமாகவே இருந்தது. அதனால் L Boardஐக் கூட மாற்றவில்லை. இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா ? என்று நினைத்தாலும் எங்கள் பள்ளியில் எங்கள் மாணவர்கள் பெறும் திறன்களை என் பிள்ளைகளும் பெற வேண்டும் என்பதற்காகவே இறைவன் துணையிருப்பான் என்ற நம்பிக்கையுடன் சேர்த்தேன். இன்று கார் ஓட்டுவது Two wheeler ஓட்டுவதுபோல் ஆகிவிட்டது !
தினமும் 30+30=60கிமீ பள்ளிக்கு காரில் சென்று வருவதால் பெட்ரோலுக்கு வருடத்திற்கு ரூ.60,000 ஆகிறது. இது என் இரண்டு பிள்ளைகளையும் தனியார் பள்ளியில் சேர்த்திருந்தால் ஆகும் தொகைக்கு இணையாகும் என்பதை யோசித்தே சேர்த்தேன். என் பிள்ளைகளுடன் சேர்த்து சில மாணவர்களையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். சில காரணங்களால் அப்பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கும் மாற முடியவில்லை.
இந்த காரை சில வருடங்களுக்கு முன்பே வாங்கியிருந்தால் என் மகனை முதல் வகுப்பிலேயே எங்கள் பள்ளியில் சேர்த்திருப்பேன். "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது !"
- இரா.குருமூர்த்தி, இடைநிலை ஆசிரியர்.
No comments:
Post a Comment