உலகில் தமிழ் அமைப்புகள், சங்கங்கள் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கு நிச்சயம் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் பல ஊர்களில் உள்ள திருக்குறள் தொடர்பான அமைப்புகள் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியை நடத்துகின்றன.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் க.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பி.கிருத்திகா ஹரிணி பிப்ரவரி 12 -ஆம் தேதி திருக்குறள் ஒப்புவிப்பதில் உலக சாதனை புரிந்து அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளார். இவர் 200 குறளை 5 நிமிடம் 39 நொடிகளில் ஒப்புவித்து உலக சாதனை புரிந்துள்ளார்
கிருத்திகா ஹரிணியின் வகுப்பு ஆசிரியையும், அவருக்கு திருக்குறள் ஒப்புவிக்க பயிற்சி அளித்தவருமான எம்.ஜெயமேரி நம்மிடம் இது குறித்து பகிர்ந்து கொண்டதாவது:
""எங்கள் பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 130 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் வாழ்க்கை நெறிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், பள்ளி ஆசிரியர்களிடம் நிதி திரட்டி, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி பரிசளித்தோம்.
ஆனால் திருக்குறள் நூலை பலரும் படிக்கவில்லை என தெரிய வந்தது. மாணவ, மாணவிகள் திருக்குறளைப் படிக்க என்ன செய்யலாம் என்று யோசித்து, இறுதியில் ஒரு முடிவு எடுத்தோம். நான் பல பள்ளிகளுக்குச் சென்று திருக்குறளை மாணவர்கள் படிக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அதற்கு பள்ளி நிர்வாகம் ஒரு தொகையை சன்மானமாக அளிக்கிறது. அந்தத் தொகையை "எழுத்து உண்டியல்' என்ற பெயரில், உண்டியலில் போட்டு வைத்துக்கொண்டேன். ஒரு திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவித்தால் அந்த எழுத்து உண்டியலிருந்து ஒரு ரூபாய் வழங்கினால் மாணவர்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பார்கள் என ஒரு யோசனை வந்தது. மேலும் மாணவர்களுக்குக் கிடைக்கும் பணத்தை அவர்களுக்கும் ஓர் உண்டியல் வாங்கி சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கூறினார்கள்.
இதையடுத்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினோம்.130 மாணவ, மாணவிகளுக்கும் புதிய உண்டியல் வாங்கப்பட்டது. அதற்கு "திருக்குறள் உண்டியல்' என பெயரிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவிக்க தொடங்கினர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு மணிநேரம் மாணவர்கள் திருக்குறளை ஒப்புவிக்க நேரம் ஒதுக்கினோம். ஒப்புவிக்கும் திருக்குறளின் பொருளையும் கூறினால் இரண்டு ரூபாய் மாணவர்களின் உண்டியலில் சேமித்து வந்தோம். முதலாம் வகுப்பு மாணவர்கள் பத்து திருக்குறள் ஒப்புவித்தால் உண்டியலில் ரூ. 10 போடுவதோடு, ஸ்மைலி பேட்ஜ் ஒன்றை மாணவர்களின் சட்டையில் குத்தினோம்.
4- 5 ஆம் வகுப்பு மாணவர்கள் 20 திருக்குறள் ஒப்புவித்தால் , ஊராட்சி மன்ற நூலகத்தில் ரூ. 20 செலுத்தி அந்த மாணவர்களை நூலக உறுப்பினர்களாகச் சேர்த்து மேலும் வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்கி வைத்தோம். இதுவரை 20 மாணவர்கள் நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். 200 திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு தாயில்பட்டியிலுள்ளஅஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்கி கொடுத்தோம். இதுவரை காவியா என்ற மாணவி 250 குறளும் கிருத்திகா ஹரிணி என்ற மாணவி 200 குறளும் ஒப்புவித்ததால் அவர்களுக்கு அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி கொடுத்துள்ளோம்.
இதையடுத்து திருக்குறள் ஒப்புவித்தலில் உலக சாதனை செய்ய ஒருவரைத் தேர்வுசெய்து பயிற்சி அளிக்கமுடிவு செய்தோம். தொடந்து 2 - ஆம் வகுப்பு மாணவி பி.கிருத்திகாஹரிணியைத் தேர்வு செய்து தினசரி ஒரு மணி
நேரம் நான் பயிற்சி அளித்தேன். மூன்று மாதகாலம் பயிற்சி அளித்தது, ஹரிணியை உலக சாதனைக்குத் தயார் செய்தோம். தொடந்து சிவகாசி அரிமா சங்கத்தைத் தொடர்பு கொண்டு ஹரிணி சாதனை செய்ய உதவி கோரினோம். அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
பின்னர் பிப்ரவரி 12 - ஆம் தேதி, சிவகாசி காவல்துணை கண்காணிப்பாளர் டி.பிரபாகரன், தொழிலதிபர்கள் ஏ.பி.செல்வராஜன் மற்றும் ஜி.அசோகன் ஆகியோர் முன்னிலையில் கிருத்திகா ஹரிணி 200 திருக்குறளை 5 நிமிடம் 39 நொடியில் ஒப்புவித்து உலக சாதனை புரிந்தார். ட்ரிம்ப் உலக சாதனை
அமைப்பின் (பழ்ண்ன்ம்ல்ட் ரர்ழ்ப்க்
தங்ஸ்ரீர்ழ்க்) தென்மண்டல நடுவர் பி.எம்.சம்பத்குமார் இது ஒரு புதிய உலக சாதனை என அறிவித்தார். தொடர்ந்து ட்ரிம்ப் உலக சாதனை அமைப்பின் தலைமை செயல் அலுவலர் முக்தாபிரதீப் உலக சாதனைக்கான சான்றிதழை ஹரிணியிடம் வழங்கினார். இனி 1330 குறளையும் ஒப்புவித்து ஹரிணி உலக சாதனை செய்ய பயிற்சி அளித்து வருகிறேன்'' என்றார் ஜெயமேரி.
No comments:
Post a Comment