கணிதத்தில் எளியமுறை சூத்திரங்களை உருவாக்கி சாதித்து வருகிறார் கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் என்.உமாதாணு(80). 'கணிதம்' என்றாலே 'கடினம்' என்பது பலரின் மனதிலும் ஆழமாகப் பதிந்துவிட்ட கருத்து. ஆனால், கணிதத்தை தன்னுடைய கணித ஆற்றலாலும், ஆய்வின் மூலமாகவும் எளிமைப்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த கணித அறிஞர் என்.உமாதாணு.
கோவை வடவள்ளியைச் சேர்ந்த இவர், ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். ஓய்வுக்குப் பின் கணிதம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்காக 'கணிதம் இனிக்கும்' என்ற ஆய்வு மையத்தை நிறுவி, தனது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுகிறார் என்.உமாதாணு.
கன்னியாகுமரி மாவட்டம் சிவராமபுரத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், மிகுந்த வறுமையால் வாடியுள்ளார். தாத்தா முத்துசாமி செட்டியாரின் ஊக்கத்தாலும், ஆதரவாலும் பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலும், கல்லூரிப் படிப்பை நாகர்கோவிலிலும், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை சென்னையிலும் முடித்துள்ளார். 1962-ல் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஸ்ரீராஜலட்சுமி உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
1963-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில், இவரது மாணவர் பழனிசாமி கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்று, மாவட்டத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார். இதைப் பாராட்டிய ஆசிரியர் சங்கங்கள், அந்த மாணவருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளன.
1967 முதல் கோவை தேவாங்க மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்த என்.உமாதாணு, அப்பள்ளியில் 30 ஆண்டுகள் பணியாற்றி 1997-ல் ஓய்வு பெற்றுள்ளார். இவரது பணிக் காலத்தில் ஒரு மாணவர்கூட கணிதப் பாடத்தில் தோல்வி அடைய வில்லை என பெருமிதத்துடன் கூறுகிறார்.
மெதுவாகப் படிப்பவர்கள், கொஞ்சம் மந்த புத்தி உடையவர்கள், சராசரியாகப் படிப்பவர்கள், நன்றாகப் படிப்பவர்கள் என பலவித மாணவர்களையும் ஒருங்கே அரவணைத்து, கற்பித்தலில் எளிமையும், இனிமையும் கலந்து, அவர்களை தேர்ச்சி பெறச் செய்வதே தனது யுக்தி என்கிறார்.
கற்றலில் பின்தங்கியிருந்த பலரை தனது வீட்டிலேயே தங்க வைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்தி அவர்களைத் தேர்ச்சி அடையச் செய்துள்ளார். கோவையைப் பொறுத்தவரை, 'கணிதம்' என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் உமாதாணு.
"1970-களில் 9 மற்றும் 10-ம் வகுப்பு பாடத் திட்டத்தில் 'கனங்கள்' குறித்த புதிய பாடப் பகுதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பகுதி மிகவும் கடினம் என்றனர் பலர். அதை எளிமைப்படுத்தி, நூலாக வெளியிட்டேன். அது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மனப்பாடம் உதவாது...
கணித சூத்திரங்களை மனப்பாடம் செய்து, தேர்வெழுத வைப்பது கடினம். மாறாக அவற்றை மாணவர்களுக்குப் புரிய வைத்தால், தேர்வில் வெற்றி பெறச் செய்வது எளிது. அதைத்தான் மாணவர்களுக்கு கற்பித்தேன்.
முக்கோணவியலில் முக்கிய கோணங்களின் மதிப்புகளை மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாணவர்களை விடுவித்து, புரிதல் மூலம் மனதில் நிலைநிறுத்தச் செய்தேன்.
வடிவ கணித தேற்றத்தின் நிருபணங்களை மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து மாற்றி, மாணவர்களுக்குப் புரிதலைக் கற்பித்தேன். மனப்பாட முறை மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விடும். புரிதல் மட்டும் ஆர்வத்தை உண்டாக்கும். கோபுரம், உயர்ந்த மரம் போன்றவற்றை மதிப்பீடு செய்ய ஏற்ற, இறக்க கோணங்கள் பயன்படுத்தப்படும். இதை நேரடி செயல்விளக்கம் மூலம் மாணவர்களுக்கு விளங்கச் செய்வேன். அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவம் என்ன? என்பதை புரிய வைத்து விட்டால் மாணவர்களுக்கு தானாக ஆர்வம் ஏற்படும்" என்கிறார் என்.உமாதாணு.
எளிமையான முறைகள்
கணக்குகளுக்கு எளிய முறையில் விடையளிப்பது குறித்து அவர் கூறும்போது, "அளவியல், கன அளவு, வளைபரப்பு, மொத்த பரப்பு தொடர்பான கணக்குகளுக்கு எளிய முறையில் விடையளிப்பது குறித்து கண்டறிந்து, மாணவர்களுக்கு விளக்கி வருகிறேன். கணிதத்தில் காரணிப்படுத்துதல் முக்கியப் பகுதியாகும். இரு எண்களின் பெருக்குத்தொகையும், அவற்றின் கூட்டுத்தொகையும் கொடுத்து, அதற்கான எண்களைக் கண்டறியும் முறையையும் எளிமைப்படுத்தி வெளியிட்டேன்.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கணிதப் பகுதியை எளிமைப்படுத்தி, 3 மணி நேர டிவிடி-யாக தயாரித்து வெளியிட்டுள்ளேன். என்னுடைய எளிய முறை கணிதத்தை ஏற்ற கணித ஆசிரியர்கள், அதற்கு 'யூனூஸ்' முறை எனப் பெயரிட்டு, மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள்.
இந்த முறையிலான கணிதப் பாடம், உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பிரபலமடைந்தது. எனவே, பல்வேறு இடங்களுக்கும் சென்று, ஆசிரியர்களுக்கு எளியமுறை கணிதத்தைக் கற்பித்தேன். இதற்காக பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கணிதத்தில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறேன். ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கணிதம் சொல்லிக்கொடுத்து வருகிறேன். எனது முயற்சிகளுக்கு மனைவி கனகம் உறுதுணையாக உள்ளார்" என்றார்.
No comments:
Post a Comment