வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் வரும் 21-ம் தேதி நிகழ்கிறது. சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணாலோ அல்லது தொலைநோக்கி மூலம் நேரடியாகவோ பார்க்க வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பாக பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள் கூறியதாவது:
வளைய சூரிய கிரகணத்தின்போது சூரியன் ஒரு நெருப்பு வளையம்போல் காட்சி அளிக்கும். வரும் 21-ம் தேதி நிகழும் வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் ராஜஸ்தான், ஹரியாணா, உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் மட்டுமே முழுமையாக தெரியும்.
தமிழகத்தில் வளைய சூரியகிரகணத்தின்போது சிறு பகுதியைப் பார்க்கலாம்.
சென்னையில் காலை 10.22 மணி முதல் 11.58 மணி வரை தெரியும்.
எக்காரணம் கொண்டும் சூரிய கிரகணத்தை வெறுங்கண்களால் பார்க்கவே கூடாது. தொலைநோக்கி அல்லது பைனாகுலரின் வழியே வெளிவரும் சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச்செய்து பார்க்கலாம் என்றார்.
வளைய சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பார்ப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி கூறும்போது, "சூரிய கண்ணாடிகளை (சன் கிளாஸ்) பயன்படுத்தி தமிழகம் முழுவதும் 500 இடங்களில் சூரிய கிரகணத்தை பாதுகாப்பாகவும், தனிமனித இடைவெளியுடன் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், சூரிய கிரகணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜூன் 17 (இன்று) முதல் 3 நாட்களுக்கு தினமும் மாலை 6 மணிக்கு ஜூம் செயலி வழியாக இணையவழி கருத்தரங்கம் நடத்துகிறோம்" என்றார்.
No comments:
Post a Comment