எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அப்துல் கலாம் குறும்படத்தைப் பார்த்து இரண்டு எண்ணங்கள் வந்துவிட்டன'- சாதிக்கத் துடிக்கும் 5-ம் வகுப்பு மாணவி

Sunday, March 18, 2018


புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு  முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பற்றிய  குறும்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.



'சலாம் கலாம்' என்று குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட  குறும்படத்தைக் கடந்த வருடம்  டிசம்பர் 17 முதல் நடப்பு மாதமான  மார்ச் 18 வரை ரூபாய் 10 சிறப்புக் கட்டணத்தில் திரையிட்டுக் காண்பிப்பதற்கு புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில், மாவட்டம் முழுக்க உள்ள அத்தனை அரசுப் பள்ளிகளிலும் இந்தக் குறும்படம் திரையிடப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று உருவம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்குக்  குறும்படம் காண்பிக்கப்பட்டது. வகுப்பறையில் அத்தனை மாணவ மாணவியரும் உற்சாகமாக அமர்ந்து 'சலாம் கலாம்' படத்தை ரசித்துப் பார்த்தனர். இப்படம் முடிந்தபிறகு, அதைப்பற்றி மாணவர்கள் விமர்சனமும் செய்தார்கள்.



ஐந்தாம் வகுப்பு மாணவி தர்ஷினி கூறும்போது, "ஓர் ஏழைத் தொழிலாளியின் மகன் கார்த்திக். அவனது திறனை அறியாமல் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஊரைச் சுற்றியவன், டாக்டர் A.P.J .அப்துல் கலாம் அவர்களின் 'அக்னிச் சிறகுகள்', 'இந்தியா 2020' ஆகிய புத்தகங்களைப் படித்து தன்னுள் இருந்த சோம்பேறித்தனத்தை விட்டு, தன்னம்பிக்கையும் ஊக்கமும் பெறுகிறான். அவனுக்குள் இருந்த திறமையையும் உணர்கிறான். மாநிலம் போற்றும் ஓட்டப்பந்தய வீரன் ஆகிறான். எதிர்பாராத விபத்தில் அவன் ஒரு காலை இழந்து ஊனமாகிறான். இந்த நேரத்திலும் அப்துல் கலாம் வரிகள் அவனை ஊக்கப்படுத்துகிறது. ஒரு காலை வைத்துக்கொண்டு அவன் சாதிக்கிறான். இதை இந்தத் திரைப்படத்தில் பார்த்தபோது, நாங்கள் தன்னம்பிக்கையும் ஊக்கமும் பெற்றோம். எனக்கு அப்துல் கலாம் அய்யாவின் அக்னிச் சிறகுகள், இந்தியா 2020 ஆகிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல; தன்னம்பிக்கை இருந்தாலே சாதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினாள்.

இந்தப் பள்ளியின் ஆசிரியர் முனியசாமி நம்மிடம்," இந்தக் குறும்படம் மாணவர்களின் மனதில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று அறிந்துகொள்ள விரும்பினோம். அதற்காக, அந்தக் குறும்படத்தை பற்றிய கருத்துகளைப் பேசும்படி கூறினோம். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அத்தனை மாணவ மாணவியரும் அப்துல் கலாம் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதைத் தங்களது விருப்பமாக வெளிப்படுத்தினர். எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர் மொத்தம் 11 பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பியபடி அப்துல் கலாம் எழுதிய இரண்டு புத்தகங்களையும் வாங்கி யாராவது பரிசளித்தால், அந்தப் பிள்ளைகளுடன் நாங்களும் மகிழ்வோம்" என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One