எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சித்த மருத்துவப் படிப்புக்கும் நிகழாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம்

Saturday, March 3, 2018

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கும் நிகழ் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், நிகழ் கல்வியாண்டில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மாநில அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு முறை கடந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கும் 2018-19-ஆம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் என்று கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கை: இந்த நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அண்மையில் ஓர் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு சேர விரும்புவோர் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இந்தத் தகவலை அந்தந்த மாநில அரசுகள் பெரிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டும்.
மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் நீட் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே 2018-19-ஆம் கல்வியாண்டில் இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு கடிதம்: இந்நிலையில் நிகழ் கல்வியாண்டில் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழகத்தின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், 'நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறையாகும்.
அதனை தமிழ் தெரிந்த மாணவர்கள் மட்டுமே எளிதில் கற்க முடியும். எனவே, இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு அதன் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.
மாணவர்கள் குழப்பம்: பிளஸ் டூ தேர்வு தொடங்கிவிட்டது. மேலும், நீட் தேர்வுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த தெளிவான அறிவிப்பு கிடைக்காததால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. எனவே, இதுதொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One