எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

டைம்ஸ் தரவரிசை: 200 ரேங்குக்குள் இடம் பிடிக்காத இந்தியக் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடிக்காத அண்ணா பல்கலைக்கழகம்

Thursday, September 27, 2018





டைம்ஸ் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் வழக்கம்போல இந்த ஆண்டும் முதல் 200 ரேங்குகளுக்குள் இந்தியக் கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.



தரவரிசையில் மும்பை ஐஐடி கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பல தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெறவில்லை.
ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு, அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை மாணவர்களின் நலன் கருதி பல்வேறு அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. அதுபோல, 2019-ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உலக தலைசிறந்த கல்விநிறுவனங்கள் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், மசாச்செட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்.ஐ.டி.), கலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
அதே இடத்தில் நீடிக்கும் இந்தியக் கல்வி நிறுவனங்கள்: இந்தியக் கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கடந்த ஆண்டு பெற்ற தரவரிசையிலேயே நீடிக்கின்றன. மும்பை ஐஐடி மட்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி.) கடந்த ஆண்டைப் போலவே 251-300 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பெற்று இந்திய கல்வி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதற்கடுத்து இந்தூர் ஐஐடி 351-400 க்கு இடைப்பட்ட ரேங்கிலும் கடந்த ஆண்டு இந்த ரேங்கில் இடம்பெற்றிருந்த ஐஐடி மும்பை 401-500 க்கு இடைப்பட்ட ரேங்குக்கு சென்றுள்ளது. ஐஐடி ரூர்கி, ஜே.எஸ்.எஸ். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமி ஆகியவையும் 401-500 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பெற்றுள்ளன.
பட்டியலில் 501-600 க்கு இடைப்பட்ட ரேங்கில் தில்லி, கான்பூர் மற்றும் காரக்பூர் ஐஐடிகள், சாவித்திரிபாய் பூலே புணே பல்கலைக்கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சென்னை ஐஐடி: சென்னை ஐஐடியைப் பொருத்தவரை கடந்த ஆண்டைப் போலவே 601-800 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பெற்றுள்ளது. அமிர்தா பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், ஐஐடி குவஹாட்டி, ஐஐடி புவனேஸ்வர், ஐஐடி ஹைதராபாத், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், புணே இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், ரூர்கேலா என்.ஐ.டி., பஞ்சாப் பல்கலைக்கழகம், தேஸ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவையும் 601-800 க்கு இடைப்பட்ட ரேங்கில் இடம்பிடித்துள்ளன.
பட்டியலில் இடம்பிடிக்காத அண்ணா பல்கலைக்கழகம்: பட்டியலில் 1001 மற்றும் அதற்கு மேற்பட்ட ரேங்குகளில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம்., சத்தியபாமா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் என தனியார் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்திருக்கும் நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One