எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இன்று உலக ரேபிஸ் தினம்: பள்ளிக்குழந்தைகளை குறிவைத்து தாக்கும் வெறிநாய்கள் - 2030-க்குள் உயிரிழப்பை முற்றிலும் தடுக்க இலக்கு

Friday, September 28, 2018





குழந்தைகளையும், பெரியவர் களையும் அச்சுறுத்தும் கொடிய நோய் ரேபிஸ். இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்.28-ம் தேதி உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



உலக சுகாதார நிறுவனம், 2030-ம் ஆண்டிற்குள் ரேபிஸ் நோயால்(வெறிநோய்) ஏற்படும் மனித இறப்புகளை முற்றிலும் தடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை 'ஜீரோ பை 30' என்ற தலைப்பிட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கின்றனர். ரேபிஸ் பாதிப்பில்லாத உலகம் என்ற இலக்கை அடைய, நாய் கருத்தடை திட்டத்தை செயல்படுத்த உலக நாடுகளை சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், தெருநாய்கள், வளர்ப்பு நாய்கள் குறித்த சரியான கணக்கெடுப்பு விவரங்கள் அரசிடம் இல்லை.


பெயரளவுக்கு மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதால் அவற்றின் இனப் பெருக்கத்தைத் தடுக்க முடிய வில்லை.

கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்ட போதிலும், அவை அதிகரித்து வருகின்றன. ஆண்டிற்கு 1 கோடியே 74 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. இதில் 40 முதல் 60 சதவீதம் பேர் பள்ளி குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மதுரை கொண்டையம்பட்டி அரசு கால்நடை மருத்துவர் சி.மெரில்ராஜ் கூறியதாவது: விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவக்கூடிய கொடிய நோய்களில் ரேபிஸ் முக்கியமானது. இந்த நோய் பாதித்த விலங்குகள் கடித்த, பிராண்டிய இடத்தில் இருந்து ரேபிஸ் வைரஸ் நரம்பு மண்டலத்தை பாதித்து மூளையை சென்றடைந்து உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீரில் ரேபிஸ் வைரஸ் காணப்படும். இந்த விலங்குகள் மனிதர்களை கடிக்கும்போது ரேபிஸ் நோய் பரவுகிறது.

ரேபிஸ் பாதிப்பு அதிகமாக நாய், பூனை, குரங்கு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் காணப்படுகிறது. கடித்துதான் ரேபிஸ் நோய் பரவ வேண்டிய அவசியம் இல்லை. நோய் பாதித்த விலங்குகளின் உமிழ்நீர் கண்ணில் தெரித்தாலே ரேபிஸ் வைரஸ் எளிதாக உடலுக்குள் சென்றடைந்துவிடும். உடலின் மேற்பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருக்கும்போது பாதிக்கப் பட்ட விலங்குகள் நக்கினாலோ, நகக் கீறல்கள் பட்டாலோ ரேபிஸ் நோய் வந்துவிடும்.

இந்தியாவில் ரேபிஸ் நோய் பரவ முக்கிய காரணமாக தெருநாய்கள் உள்ளன. தடுப்பூசி போடாமல் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் இந்த நோய் வரக்கூடும். அப்படி வரும்பட்சத்தில் அந்த நாய்கள் அதிக மிரட்சியுடனும், ஆக்ரோஷத்துடனும் காணப்படும். சரியாக சாப்பிடாது, தூங்காது. இந்த அறிகுறிகளை நோயின் ஆரம்ப நிலையில் காணலாம். அடுத்தக்கட்டமாக கட்டைகள், செங்கல், இரும்பு துண்டுகளை கடிக்க ஆரம்பிக்கும். தன் எதிரில் வரக்கூடிய மற்ற விலங்குகள், மனிதர்களை விரட்டி விரட்டி கடிக்க முயற்சி செய்யும். தண்ணீர், உணவு சாப்பிடாது. இறுதியில் உயிரிழக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தடுக்க என்ன செய்யலாம்?

கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஆர்.ராஜசேகரன்கூறியதாவது: தெருநாய்கள் மட்டுமின்றி, வளர்ப்பு நாயாக இருந்தாலும் கடித்துவிட்டால் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்தை வெறும் கையால் தொடக்கூடாது. பாதுகாப்பான கை உறைகளைக் கொண்டு கடிபட்ட இடத்தை 15 நிமிடங்கள் குழாய் தண்ணீரில் கழுவ வேண்டும். அதன்பின் டிஞ்சரை பயன்படுத்தி கடித்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் அறியாமையால் கடிபட்ட இடத்தில் மஞ்சள் பொடி, காப்பி பொடியை வைக்கிறார்கள். அப்படி செய்யக் கூடாது. வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தடுப்பூசி போட்டு பராமரிக்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One