தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் நூலகம் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கோவை மாநகர காவல் நிலையங்களில் நூலகம் திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 40 காவல் நிலையங்களில் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்கள் அமைக்கும் திட்டம் கடந்த மாதம் துவக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாநகர பகுதிகளில் உள்ள 24 காவல் நிலையங்களில் நூலகம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.
உப்பிலிபாளையம் பகுதியிலுள்ள காவலர் சமுதாய கூடத்தில் அரிமா சங்கம் மற்றும் மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எஸ் பி வேலுமணி நூலகம் திட்டத்தை துவங்கி வைத்ததுடன் நூலகத்திற்கான புத்தகங்கள் வழங்கியவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர். எஸ். புரம் காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டதும், சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அதற்கு அடுத்தபடியாக இருப்பதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் தமிழக காவல்துறை மிக சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எஸ்.பி . வேலுமணி, காவல் நிலையத்தில் நூலகம் என்ற திட்டமானது மிகச்சிறந்த திட்டம் எனவும், இது மன உளைச்சலுடன் காவல் நிலையங்களுக்கு வரும் பொது மக்களுக்கும் காவல் நிலையங்களில் உள்ள காவலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் குறிப்பிட்டதுடன், இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த முதலமைச்சரிடம் பரிந்துரைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment