சென்னையில், பள்ளிக்கல்வி அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவான அரசுத் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அவற்றின் அருகேயுள்ள அரசுப் பள்ளியோடு இணைத்துவிடலாம் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. கல்வி உரிமைச் சட்டத்தில் ஒரு மாணவரின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தொடக்கப்பள்ளி அமைந்திருக்க வேண்டும் என்றிருக்கும் நிலையில், அதிகாரிகள் ஆலோசித்தது போல பள்ளிகளை மூடினால் என்னவாகும் என்று கல்வியாளர் பேராசிரியர் கல்விமணியிடம் கேட்டேன்.
``நானும் அந்தச் செய்தியைப் படித்தேன். அதை அமைச்சர் மறுத்துவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். என்னைக் கேட்டால், இப்படி ஆலோசிப்பதற்கான அடிப்படையை நாம் யோசிக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்ட முழக்கத்தின் ஒரு கோரிக்கை தாய்வழிக் கல்வி வேண்டும் என்பது. ஆனால், அது நடைமுறைக்கு முழுமையாக வரவில்லை. மாறாக, ஆங்கில வழிக்கல்விப் புகுத்தப்பட்டதும், அனைத்துப் பெற்றோர்களின் கவனமும் அந்தப் பக்கம் சென்றுவிட்டது. இதனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. நான் சின்னக் கிராமத்தில் பிறந்தவன். நான் படிக்கும்போது இப்படியான ஆங்கிலக் கல்வி முறை அதிகரித்திருந்தால், நான் படித்து பேராசிரியராகியிருப்பேனா என்பது சந்தேகம்தான். ஆங்கிலத்தில் படிக்க வைப்பதை ஒரு பெருமையாக நினைக்கும் மனோபாவமும் நம் மக்களிடம் வந்துவிட்டது. இவ்வளவு இருந்தபோதும் ஏழை எளிய மக்களின் குழந்தைகளின் கல்வித் தேவையை அரசுப் பள்ளிகள்தான் பூர்த்தி செய்கின்றன. அவற்றைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு. அரசுத் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியைத் தொடங்குவது சரியானது அல்ல. இதையே, ஓர் ஆய்வில், ஆங்கிலக் கல்வி தொடங்கப்பட்ட பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாகக் கூறுகிறது.
நாம் கொஞ்சம், கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிற தாய்மொழிக் கல்வியை நோக்கிச் செல்ல வேண்டிய காலகட்டம் இது. தாய்வழிக் கல்விதான் சிந்தனையாளர்களையும் புதிய புதிய கண்டுபிடிப்பாளர்களையும் உருவாக்கும். மனப்பாடக் கல்வி ஏற்கெனவே கண்டுபிடித்ததில் வேலை செய்பவர்களைத்தான் உற்பத்தி செய்யும். அதற்கு உதாரணமாக நாங்கள் நடத்தும் தமிழ் வழிக்கல்வி பள்ளியையே எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு, தேசிய அறிவியல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்டத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாணவர் எங்கள் பள்ளியில் படிப்பவர்தான். எனவே, இந்தப் பிரச்னையின் அடிப்படை தாய்வழிக்கல்வியை ஒதுக்கியதே என்பதை உணர்ந்து அதற்கு உரிய பணிகளைச் செய்ய வேண்டியது அவசியம்" என்கிறார்.
No comments:
Post a Comment