16 பந்தில் 74 ரன்களை குவித்து ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாஜாத் டி10 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
10 ஓவர்கனை மட்டும் கொண்ட டி10 லீக் தொடரின் 2வது சீசன் நேற்று தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் பிரன்டன் மெக்கலம் தலைமையிலான ராஜ்புட்ஸ் அணியும், ஷேன் வாட்சன் தலைமையிலான சிந்தீஸ் அணியும் மோதினர்.
முதலில் பேட் செய்த சிந்தீஸ் அணியில் ஷேன் வாட்சன் அபாரமாக விளையாடி 20 பந்துகளில் 42 ரன்களை குவித்து அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை குவித்தது.
இதனையடுத்து 95 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜ்புட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரன்டன் மெக்கலம் மற்றும் முகமது ஷாஜாத் களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே அதிரடியாய் விளையாடிய முகமது ஷாஜாத் 12 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். மேலும் அவர் ஆட்ட நேர முடிவில் 16 பந்துகளில் 8 சிக்சர், 6 பவுண்டரி மற்றும் 2 சிங்கிள்களுடன் 76 ரன்களை குவித்தார். மறு முனையில் அவருக்கு இணையாக விளையாடிய மெக்கலம் 8 பந்துகளில் 21 ரன்களை குவித்தார். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் ராஜ்புட்ஸ் அணி 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
12 பந்தில் அரைசதம் கடந்ததன் மூலம் முகமது ஷாஜாத் டி10 கிரிக்கெட் போட்டியில் அதிவிரைவில் அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் ராஜ்புட்ஸ் அணி ரன் ரேட் 24 ரன் பெர் ஓவர் என்ற வீதத்தில் அடித்து வெற்றி பெற்று வரலாற்று சாதனை செய்துள்ளது
No comments:
Post a Comment