எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

செல்போன் கட்டணம் உயருமா..? ஆட்டத்தை தீர்மானிக்கப்போகும் ரிலையன்ஸ்!

Friday, November 23, 2018




வரவிருக்கிற காலாண்டுகளிலும் வருவாய் இழப்பைச் சந்திக்க ரிலையன்ஸ் தவிர்த்த மற்ற நிறுவனங்கள் தயாராக இல்லை. போட்ட மூலதனத்துக்கு ஏற்ற வருவாயை ஈட்ட வேண்டும் என்பதில் இந்த நிறுவனங்கள் முனைப்புடன் இருக்கின்றன.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர், செல்போன் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த கட்டணத்தில் தொலைபேசி சேவைகளை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தச் சலுகை நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்றும், விரைவிலேயே செல்போன் சேவைக் கட்டணங்கள் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், அந்தக் கட்டண உயர்வு எப்போது என்பதைத் தீர்மானிக்கப்போவதும் ரிலையன்ஸ் நிறுவனம்தான் என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள்.

செல்போன் கட்டணம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆர்ப்பாட்டமான அறிவிப்புகள் மற்றும் அதிரடி சலுகைகளுடன் செல்போன் சேவை துறையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ. மிகக் குறைந்த கட்டணத்தில் அவுட் கோயிங் முற்றிலும் இலவசம்,  மின்னல் வேக இணையதள இணைப்பு என்ற சேவைகளைப் பார்த்து, அதுவரை பிற செல்போன் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தி வந்தவர்களும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாற, வேறு வழியில்லாமல் மற்ற செல்போன் நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டன. இருப்பினும் இந்தக் கட்டணக் குறைப்பு போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஏர்செல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்தத் தொழிலிருந்தே வெளியேறின. ஐடியா செல்லுலார் நிறுவனம், வோடஃபோன் இந்தியா நிறுவனத்துடன் இணைய நேரிட்டது. இதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடஃபோன் ஐடியா உருவெடுத்தது. இதர சிறு நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன.

 பின் தங்கிய போட்டி நிறுவனங்கள்

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த  இரண்டாவது காலாண்டில் 4,974 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முக்கியக் காரணம் நஷ்டத்தில் இயங்கிய ஐடியா செல்லுலார் நிறுவனத்தை வாங்கியதுதான் என்றும் வோடஃபோன் நிறுவனம் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோன்று, பார்தி ஏர்டெல் நிறுவனமும் நஷ்டத்தைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 118.80 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி, சந்தை ஆய்வாளர்களையே ஆச்சர்யப்படுத்தியது.  அதே சமயம் 2017-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 343 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இது 65.4% குறைவே.

ஆனால், ரிலையன்ஸ் ஜியோ எதிர்பார்த்தபடியே 681 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் ஈட்டி, தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் 3.7 கோடியாக அதிகரித்து, மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 25.23 கோடியாக உயர்த்திக் கொண்டது. தற்போது சந்தையின் வருவாய் பங்கு அடிப்படையில், இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய தொலைபேசி சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது ரிலையன்ஸ்.

இதனுடன், தற்போது வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல்  ஆகிய 2 பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து நிற்கும் நிலையில், செல்போன் சேவைக் கட்டணங்களை இனி இந்த நிறுவனங்கள்  உயர்த்தலாம் என, ஏற்கெனவே இத்துறை உயரதிகாரிகள் சூசகமாக தெரிவித்திருந்தனர்.  ரிலையன்ஸ் ஜியோவைத் தவிர்த்து, மற்ற செல்போன் சேவை நிறுவனங்கள், கடந்த சில காலாண்டுகளில் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்த போதிலும், கடன் பத்திரங்கள் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நிதி திரட்டி, தொழில் மூலதனத்தை அதிகரித்துக்கொண்டு போட்டியைச் சமாளித்து சந்தையில் நிலைத்து நிற்கின்றன. அதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு ஏற்கெனவே 3.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மூலதனமாக இறைத்துள்ளது.

இந்த நிலையில், வரும் காலாண்டுகளிலும் வருவாய் இழப்பைச் சந்திக்க, ரிலையன்ஸ் தவிர்த்த மற்ற நிறுவனங்கள் தயாராக இல்லை. போட்ட மூலதனத்துக்கு ஏற்ற வருவாயை ஈட்ட வேண்டும் என்பதில் இந்த நிறுவனங்கள் முனைப்புடன் இருக்கின்றன. எனவே, கட்டண உயர்வு குறித்து இந்த நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.

முதலிடத்தைக் குறிவைக்கும் ஜியோ

ஆனால், ஜியோ என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்தே அந்த நிறுவனங்கள் தங்கள் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க முடியும். ஏனெனில்,  ஜியோவும் நீண்ட காலத்துக்கு தற்போதைய சலுகைகளை வழங்க விரும்பாது. மற்ற செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை வளைக்கவே இலவச அவுட்கோயிங், கவர்ச்சிகரமான டேட்டா என சலுகைகளை அறிவித்தது. தற்போது,  இந்திய செல்போன் பயன்பாட்டாளர்களின் சந்தையைத்  தனது பிடியின் கீழ் கொண்டு வரும் அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறிவிட்டது. இது நல்லதா, கெட்டதா என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

இந்த நிலையில், `4ஜி சேவை தளத்தில் தன் ஆதிக்கத்தை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள ரிலையன்ஸ் நினைக்கிறது. எனவே, அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 40 கோடியாக அதிகரித்து, முதலிடத்தைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டால், அதன் பின்னர் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படலாம் என்றும், அது வரை  கட்டண உயர்வு இருக்காது’ என்று பிரபல பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லைன்ச் தெரிவித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தலும் 2019 ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம் என்பதால், கட்டண உயர்வு இருக்காது என அந்த நிறுவனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜியோ

இதனிடையே சந்தை கைப்பற்றலின் தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக,   ( ஃபைபர் டு த ஹோம்)  என்ற பெயரில், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக ஃபைபர் கேபிள் மூலம் இணைதள சேவை அளிக்கும்  பிராட்பேண்ட் சேவைத் திட்டம் மூலம் 5 கோடி வாடிக்கையாளர்களைத் தனது நெட் ஒர்க்கின் கீழ் கொண்டு வர ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜியோவில் பயன்படுத்திய அதே யுக்திகளை பிராட் பேண்டிலும் கையாளப்போகிறது ரிலையன்ஸ். அதாவது, ஜியோவைப்போலவே தொடக்கத்தில் இலவச டேட்டாக்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவரத் திட்டமிட்டுள்ளது.

இது தவிர,  தனது மொபைல் டவர்களின் எண்ணிக்கையையும் 2 லட்சத்திலிருந்து, அடுத்த 6 மாதங்களுக்குள் 2.36 லட்சமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய மொபைல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை சுமார் 100 கோடியாக உள்ளது. இதில் 50 % முதல் 60% பயன்பாட்டாளர்கள் இன்னமும் 2ஜி நெட் ஒர்க்கிலேயே உள்ளனர். அதாவது இன்டர்நெட் சேவை இல்லாமல் இருப்பவர்கள்.

கட்டண உயர்வு எப்போது?

இந்த நிலையில்,  ரிலையன்ஸ், தனது  4ஜி வாடிக்கையாளர்கள் தளத்தை மென்மேலும் தீவிரமாக விரிவுப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம், செல்போன் சேவை சந்தையில் 35 சதவிகித வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வோடஃபோன் ஐடியா  நிறுவனத்தின் 2ஜி வாடிக்கையாளர்கள் 4ஜி நெட் ஒர்க்குக்கு மாறுவது மிக மெதுவாகவே நடைபெகிறது. ஏர்டெல் நிறுவனத்திலும் இதே கதைதான். எனவே, இந்த வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறிவிடாமல் தக்கவைத்துக் கொள்ள இந்த நிறுவனங்கள் கடுமையாகப் போராட வேண்டியதிருக்கும்.

மொபைல் கட்டண உயர்வு

இத்தகைய சூழலில் ரிலையன்ஸ், போட்டி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கான இலக்கை எட்டிவிட்டால்,  அதன் பின்னர் கட்டணத்தை நிச்சயம் மாற்றியமைக்கும். அப்படி மாற்றியமைத்து விட்டால், அதைத் தொடர்ந்து வோடஃபோன் மற்றும் ஏர்டெல் போன்ற அதன் போட்டி நிறுவனங்களும் கட்டண உயர்வை அமல்படுத்திவிடும்.

இருப்பினும், இப்போதைக்கு செல்போன் சேவை கட்டண உயர்வு இருக்காது. ஆனால், விரைவிலேயே அதை எதிர்பார்க்கலாம். எனவே, கூடுதல் கட்டணத்துக்கு வாடிக்கையாளர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One