பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ - ஜியோ) திங்கள்கிழமை அறிவித்தது.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.ஓ.சுரேஷ், சி.சேகர், உ.மா.செல்வராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியது:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஓய்வூதியத் திட்டம் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டி அறிக்கை, ஊதியக்குழு முரண்பாட்டைக் களைவதற்கான சித்திக் கமிட்டி அறிக்கை, 21 மாத நிலுவைத் தொகையை வழங்குவதற்கான முடிவு ஆகியன குறித்து ஜனவரி 9 ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் போதிய வாய்ப்பு அளித்தபோதும், எங்களது கோரிக்கைகளை அரசு உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை. இதுவரை அரசின் நிலைப்பாடு என்ன என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. ஆகவே, ஜனவரி 22 முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். அரசு ஊழியர், ஆசிரியர்களின் 7 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். இதுகுறித்து தமிழக முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பது ஏற்புடையதல்ல. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்றனர்
No comments:
Post a Comment