புதுக்கோட்டை மாவட்டத்தை மாநில தேர்ச்சிப்பட்டியலில் முதல் இடத்தில் இடம்பெற செய்ய தலைமையாசிரியர்கள் தனிக்கவனம் எடுக்க வேண்டும்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா
புதுக்கோட்டை,ஜன.5: புதுக்கோட்டை மாவட்டத்தை மாநில தேர்ச்சிப்பட்டியலில் முதல் இடத்தில் இடம்பெற செய்ய தலைமையாசிரியர்கள் தனிக்கவனம் எடுக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு நடைபெற்ற கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமையாசிரியர்களைக் கேட்டுக் கொண்டார்..
அனைத்து அரசு ,அரசு உதவி பெறும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமையில் நடைபெற்றது..
கூட்டத்திற்கு தலைமைவகித்து தலைமையாசிரியர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: பொதுத்தேர்வு எழுதும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி பாடங்களின் சுழற்சி முறையில் தேர்வுகள் 50 மதிப்பெண்கள் அளவிற்கு வழங்கப்பட வேண்டும்.தேர்வுகள் உடனுக்குடன் மதிப்பீடு செய்யப்பட்டு பாட ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.பொதுத்தேர்விற்கு புளூபிரிண்டு முறை பயன்படுத்தாததால் பாடத்தின் முழுப்பகுதியும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை பாட வாரியாக இனம் கண்டு தினசரி அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.மேலும் பயிற்சி வழங்கியதற்கான பதிவேடுகள் பாட ஆசிரியர்களால் பராமரிக்கப்பட வேண்டும்.நூறு சதவீதம் தேர்ச்சி பெறுவோம் என்ற வாசகத்தை வகுப்பறை மற்றும் தகவல்பலகையில் ஒட்டப்பட வேண்டும். மேலும் சாலை பாதுகாப்பு விபத்துகளை குறைப்பதற்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வினை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் கூறிட வேண்டும்.இலவச பேரூந்து பயண அட்டை பயன்படுத்தும் மாணவர்களை பள்ளிக்கு வரும்பொழுதும் பள்ளியிலிருந்து செல்லும் பொழுதும் வரிசையாக செல்ல அறிவுறுத்த வேண்டும்.தூய்மை பாரத சுகாதார சங்கங்கள் அரசுப் பள்ளியில் தொடங்கி சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வினை மாணவர்களுக்கு ஏற்படுத்தி அது தொடர்பான போட்டிகள் நடத்தி முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அறிக்கை அளித்திட வேண்டும்.மேலும் அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி விழுக்காடு குறைவாக உள்ள பாட ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி தொடர்ந்து இருக்கக் கூடிய நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி நல்ல தேர்ச்சி விழுக்காட்டை பெறவும் நமது மாவட்டத்தை மாநில தேர்ச்சிப்பட்டியலில் முதல் இடத்தில் இடம்பெற செய்ய தலைமையாசிரியர்கள் தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் கே.அண்ணாமலை ரஞ்சன்,இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர்( பொறுப்பு) இரா.சிவக்குமார் , அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ( பொறுப்பு) கு.திராவிடச்செல்வம் , மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள்,அரசு ,அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment